947 total views
ஐந்து வருடத்துக்கு முன்பான
நிழல் நீண்ட ஒரு மாலைப் பொழுதி்ன்
வெள்ளி முளைத்த வேளையில்
தூக்கு மாட்டிக் கொண்ட அந்த இருவரைத் தவிர
வேறெவரும் அறிந்திராத
அந்த அரையிருட்டு அறையில்
அவர்களின் இறுதி சந்திப்பு
நிகழ்ந்து கொண்டிருக்கிறது நித்தமும்
எப்பொழுதும் அவனே முதலில் மௌனத்தை அறுப்பான்
“தூண்டிலைத் தின்னும் மீன்கள் பெண்கள் !”
“என்ன தான் உனக்குப் பிரச்சினை ?”
“எல்லாமே தான்”
“நானும் தானே ?”
“நீ மட்டுமில்லை”
“வேற என்னல்லாம் ?
“….”
“பதில் சொல்ல மாட்டியா ?”
“சொல்லத் தெரியலை”
“அப்போ என்னதான் தெரியும் ?”
“இல்லாததை உருவாக்குவேன்
இருப்பதை அழகாக்குவேன்”
“இதுதான் உன்னோட பிரச்சினை !”
“இதுவே தான் முன்பு உனக்குப் பிடித்திருந்தது””
“உனக்கு சொன்னா புரியாது. நான் போறேன்”
“நாளைக்கும் வருவாயா ?”
“தெரியலை”
“பத்திரமாக வீட்டுக்குப் போனதை மறக்காமல்
எனக்குத் தகவல் சொல்வாயா ?”
“உன்னிடம் எப்படிச் சொல்வது ?”
“வீட்டில் ஜன்னல் இருக்கிறதில்லையா ?”
“ம்ம் இருக்கு அதுக்கென்ன ?”
“ஜன்னலுக்கு வெளியே
கூட்டுக்குத் திரும்பிச் செல்லும்
ஏதோ ஒரு பெயர் தெரியாத பறவையிடம்
தகவல் சொல் போதும்”
“நீ திருந்தவே மாட்ட….”
அவள் போன பின்பும்
அவள் சுவாசம் அவள் வாசம்
அவள் கோபம் அவள் குரல்
அவள் பார்வை அவள் தேவை எல்லாமும்
அவனது நிழலுடன் சேர்ந்து
விளக்கு எரியாத அந்த அறையின்
கருந்துளை இருளில் கலந்திருந்தது
பெயர் தெரியாத ஜன்னல் பறவையின்
தகவலுக்காக வேண்டி
அவனது தவம்
தொடர்ந்து கொண்டிருக்கும்
காலங்களைக் கடந்து….!
–
அவனி அரவிந்தன்
வெண்ணிலப்பக்கங்கள்
Comments are closed.