1,085 total views
முந்தைய குளிர் இரவின்
தனிமை ஏற்றிவிட்ட கனத்தை
கரைத்துவிடும் குறிக்கோளுடன்
சாலையில் போவோர் வருவோர்
அனைவரைப் பார்த்தும் சிரிக்கிறான்
முறைப்புகளைப் பொருட்படுத்தாமல்
சலாம் வைக்கிறான்
அவ்வப்போது கொஞ்சம்
பாலிதீன் காகிதங்களையும்
அவன் கடித்துக் கொள்கிறான்…
சுண்ணாம்பும் கரியும் கொண்டு
வரையப்பட்ட திருப்பதி வெங்கடாஜலபதி
தார் தரையில்
அருள் பாலித்துக் கொண்டிருக்க,
நடந்து செல்லும் பக்தரெல்லாம்
கன்னத்தில் போட்டபடியே
கடந்து போகிறார்கள்
சாலையின் சரிவில் புரளும்
கால்களற்ற ஓவியனின்
வர்ணம் இழந்த கண்களை
நேர்கொண்டு பார்க்கும் போது
சட்டைப்பையில் சிறைப்பட்ட சில்லறைகளைத்
தடவிப் பார்த்துக் கொண்டே
மறைந்து போகிறார்கள்…
மாராப்பை பூமிக்குத்
தாரை வார்த்துவிட்டு
வளைந்து நெளிந்து
பிரம்மாண்டமாய் நிற்கும் அழகியின்
பட்டுத் துணி மூடிய
பாகங்கள் குறித்த கற்பனையில்
பல விதமான கண்கள்
குத்திக் கிடக்கின்றன
விழிகளை விட்டுச் சென்றவர்கள்
அவற்றை மீண்டும் எடுத்துக் கொள்ள
மறந்து போகிறார்கள்…
மரணத்துடன்
மடலாடிக் கொண்டிருக்கும்
மூதாட்டியின் சுருங்கிய கண்வழியே
விரியும் இந்த
சாளரத்து உலகம்,
எந்தப் பார்வைகளைப் பற்றிய
பிரக்ஞையும் இன்றி
தன் போக்குக்கு
சுழித்து ஓடிக் கொண்டிருக்கிறது…
செவிலிப் பெண்ணொருத்தியின்
“பாட்டி உங்களுக்கு
மேல் வார்டுக்கு மாத்திருக்கு
போலாமா ?”, என்ற குரலுக்கு,
மூச்சை ஆழமாக உள்ளிழுத்தபடி
சாளரத்துக்கு வெளியில்
வேடிக்கை பார்த்துக் கொண்டே
“ஆகட்டும்”, என்று சொல்லி
ஆயத்தம் ஆகிறாள்
அப்போது சாளரத்தின் திரைச்சீலை
காற்றில் மெலிதாகப்
பிரண்டு கொண்டிருந்தது….!
–அன்புடன்
அவனி அரவிந்தன்.
வெண்ணிலா பக்கங்கள்
Comments are closed.