அமேசான் :புளு மூன் திட்டம் அறிமுகம்

563

 1,141 total views

உலகின் முன்னணி செல்வந்தரான அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ்,  நிலவில் கால் பதிப்பதற்கான தனது கனவுத் திட்டத்தில் முக்கிய அடியெடுத்து வைத்திருக்கிறார். நிலவுக்கு ஆய்வு பொருட்களையும், மனிதர்களையும் கொண்டு செல்லக்கூடிய விண்கல மாதிரியை அவர் அண்மையில் அறிமுகம் செய்தார்.

பெசோஸின் நிலவு திட்டம்

இ-காமர்ஸ் துறையில் முன்னோடியாக இருக்கும் அமேசான் நிறுவனர் ஜெப் பேசோஸ் உலகின் முன்னணி பணக்கராராக இருப்பது தெரிந்த விஷயம் தான். மேலும் இ-காமர்ஸ் துறையில் அமேசான் ஆதிக்கத்தை தக்க வைத்துக்கொள்ளும் வகையில் பேசோஸ் வர்த்தக வியூகங்களை செயல்படுத்தி வருவதும் தெரிந்த விஷயம் தான்.

அமேசான் மூலம் பெரும் செல்வம் ஈட்டிய பெசோஸ், தன் செல்வத்தின் ஒரு பகுதியை நன்கொடையாக வாரி வழங்குவதற்கும் அறியப்படுகிறார். இது தவிர பேசோஸிற்கு விண்ணைத்தாண்டிய கனவும் இருக்கிறது. ஆம், அவர் நிலவை குறி வைத்திருக்கிறார்.

இதற்காக அவர் புளு ஆரிஜன் எனும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். பேசோஸ் சொந்த பணத்தில் நடத்தி வரும் நிறுவனம் இது. நிலவுக்கு விண்கலங்களையும், அதில் மனிதர்களையும் அனுப்பி வைப்பது தான் இந்த நிறுவனத்தின் நோக்கம்.

புளு ஆரிஜன் நிறுவனத்தை நடத்துவதற்கான ஆண்டுதோறும் பெசோஸ் ஆண்டுதோறும் அமேசான் நிறுவனத்தில் தனது பங்குகளில் ஒரு பில்லியன் டாலர் அளவிலான பங்குகளை விற்று காசாக்கி வருகிறார்.

நிலவுக்கு விண்கலத்தை அனுப்புவதெல்லாம் தனிப்பட்ட நிறுவனத்திற்கு சாத்தியாமா என்று கேட்கலாம் தான். ஆனால் அமெரிக்காவில் தனியார் நிறுவனங்கள் பல விண்வெளி பயணத்திற்கான ஆய்வு முயற்சியில் உற்சாகத்துடன் ஈடுபட்டிருக்கின்றன. இவற்றில் பெசோஸின் புளு ஆரிஜினும் ஒன்று.

பெசோஸ் தனது நிறுவனத்தின் நிலவு பயணத் திட்டத்தை விரிவாக விவரித்ததோடு, இதற்கான மாதிரி விண்கலமான புளு மூனையும் (Blue Mooon) அறிமுகம் செய்தார். அதோடு அது நவீன ராக்கெட் இஞ்சினையும் அறிமுகம் செய்து வைத்தார்.

புளுமூன் விண்கலம், அறிவியல் ஆய்வுக்கு தேவையான கருவிகளை நிலவுக்கு கொண்டு சென்று தரையிறக்குவதோடு, விண்வெளி வீரர்களையும் அழைத்துச் செல்லக்கூடியது. இதன் விரிவாக்கப்பட்ட வடிவம் நிலவுக்கு டூர் அடிப்பது போல, அங்கு சென்றுவிட்டு திரும்பி வரக்கூடியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் பெசோஸின் விண்கலம் முற்றிலும் தானியங்கி மயமானது. பயணம், தரையிரங்குவது என எல்லாவற்றையும் அது தானே இயக்கிக் கொள்ளும். ஆய்வு கருவுகளை தரையிறக்குவதை எல்லாம் அதன் ரோபோக்கள் பார்த்துக்கொள்ளும்.

நிலவின் மேற்பரப்பு பற்றி ஆய்வில் எண்ணற்ற தகவல்கள் தெரிய வந்திருப்பதால், அவை அனைத்தையும் இந்த விண்கலம் பயன்படுத்திக்கொள்ளும். நிலவுக்கான வரைப்படத்தை வைத்துக்கொண்டு அங்கு இஷ்டம் போல உலாவும் திறன் படைத்தது என்றும் கூறப்படுகிறது.

இந்த விண்கலத்தை செலுத்துவதற்கான மேம்பட்ட ராக்கெட் இஞ்சினும் உருவாக்கப்பட்டுள்ளது. நிலவில் தண்ணீர் பனிக்கட்டிகள் வடிவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் (இந்தியாவின் சந்திராயன் கண்டுபிடிப்பு) அங்குள்ள தண்ணீரை கொண்டு ஹட்ரஜன் வாயுவை உற்பத்தி செய்து சொந்த எரிபொருளை எதிர்காலத்தில் தயார் செய்து கொள்ளும் ஆற்றலும் இந்த விண்கலத்திற்கு இருப்பதாக கருதப்படுகிறது.

அடுத்த ஐந்தாண்டுக்குள் நிலவுக்கு மீண்டும் மனிதர்களை அனுப்பி வைக்கும் முயற்சியில் அமெரிக்கா தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில், நாசாவுடன் பேசோஸ் நிறுவனம் இணைந்து செயல்படும் வாய்ப்பு இருப்பதாகவும் கருதப்படுகிறது. நாசாவின் ஒப்பந்தம் கிடைக்காவிட்டால் கூட, பெசோஸின் புளு ஆரிஜின் நிறுவனம் நிலவு திட்டத்திற்கான ஆர்டரை தனியார் ஆய்வு நிறுவனங்கள் போன்றவற்றிடம் இருந்து எளிதாக பெறும் என கருதப்படுகிறது.

முதல் கட்டமாக விண்வெளி சுற்றுலாவை துவக்கி அதன் அடுத்த கட்டமாக, நிலவுக்கு விண்கலங்களையும், விண்வெளி வீரர்களையும் அனுப்பி வைத்து அங்கேயும் தனது ராஜ்ஜியத்தை நிறுவ பெசோஸ் திட்டமிட்டிருக்கிறார். இதில் கணிசமான முன்னேற்றத்தை பெற்றிருப்பதை அவர் புளு மூன் அறிவிப்பு மூலம் உணர்த்தியிருக்கிறார்.

You might also like

Comments are closed.