சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சுற்றுலா செல்லலாம்

812

 639 total views

இனி விண்வெளிக்கு சுற்றுலா செல்ல வழி பிறந்துள்ளது. சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சுற்றுலா பயணம் மேற்கொள்ள ‘நாசா’ அனுமதி வழங்கி உள்ளது.

சுற்றுலா செல்வது என்றால் எல்லோருக்கும் உற்சாகம் பிறந்து விடும். கோடை வாசஸ்தலங்களுக்கு, சுற்றுலா தலங்களுக்கு செல்வதற்காக பஸ், ரெயில், விமானம் போன்றவற்றில் பயணம் செய்ய ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்கிறோம். இதே போன்று விண்வெளிக்கும் டிக்கெட் முன்பதிவு செய்து சுற்றுலா செல்லும் நிலையை உருவாக்க வேண்டும் என்று அமெரிக்க நாட்டில் முயற்சிகள் நடந்தன. குறிப்பாக ஸ்பேஸ் எக்ஸ், புளு ஆர்ஜின், விர்ஜின் கேலக்டிக் உள்ளிட்ட பயண நிறுவனங்கள் இதற்கான முயற்சியில் ஈடுபட்டு வந்தன. இப்போது இந்த முயற்சிக்கு வெற்றி கிடைத்துள்ளது.

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு ‘நாசா’வும், ரஷியாவும் இணைந்து விண்வெளியில் ஐ.எஸ்.எஸ். என்னும் சர்வதேச விண்வெளி நிலையத்தை 1998-ம் ஆண்டு நிறுவின. இந்த சர்வதேச விண்வெளி மையத்தில் வீரர்கள் தங்கி இருந்து ஆராய்ச்சிப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சர்வதேச விண்வெளி மையத்தை வணிக ரீதியில் பயன்படுத்தவும், விண்வெளி வீரர்கள் லாபம் சார்ந்த ஆராய்ச்சிப்பணியில் ஈடுபடவும் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு ‘நாசா’ இதுவரை தடை விதித்து இருந்தது. இப்போது அதே ‘நாசா’, சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சுற்றுலா பயணம் மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கி உள்ளது.

இதன்படி ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு 2 சுற்றுலா திட்டங்களை மேற்கொள்வதற்கு அனுமதிப்போம் என அந்த நிலையத்தின் துணை இயக்குனர் ராபின் கேட்டன்ஸ் தெரிவித்தார்.

அமெரிக்காவின் விண்கலம் மூலமாக சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு 30 நாட்கள் வரை பயணம் மேற்கொள்வதற்கு தனியார் விண்வெளி வீரர்களை அனுமதிப்போம் என்று ‘நாசா’ கூறி உள்ளது.இதையொட்டி நியூயார்க் நகரில் ‘நாசா’வின் தலைமை நிதி அதிகாரி ஜெப் டெவிட் நேற்று முன்தினம் கூறும்போது, “வணிக வாய்ப்புகளுக்காக சர்வதேச விண்வெளி நிலையத்தை நாசா திறந்து விடுகிறது. இதுவரை இந்த வாய்ப்பு யாருக்கும் வழங்கப்பட்டது இல்லை” என கூறினார்.

சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு விண்கலத்துடன் செல்கிற ஊழியர்கள் யார், விண்வெளி சுற்றுலா பயணிகளின் மருத்துவம், பயிற்சி தேவைகளை கவனிப்பது என அனைத்தையும் தனியார் வணிக நிறுவனங்கள் (சுற்றுலா ஏற்பாடு செய்யும் நிறுவனங்கள்) பார்த்துக்கொள்ள வேண்டும் என ‘நாசா’ கூறி உள்ளது. இந்தப் பணியில் 2 தனியார் நிறுவனங்களை ‘நாசா’ அமர்த்தி உள்ளது. அது ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் போயிங் நிறுவனங்கள் ஆகும். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், டிராகன் விண்கலத்தை விண்வெளி பயணத்துக்காக பயன்படுத்தும். போயிங் நிறுவனம், விண்வெளி பயணத்துக்காக ஸ்டார்லைனர் என்ற விண்கலத்தை உருவாக்கி வருகிறது.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஒரு இரவு தங்குவதற்கு ‘நாசா’ 35 ஆயிரம் டாலர் (சுமார் ரூ.24½ லட்சம்) வசூலிக்கும். விண்வெளி சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யும் பயண நிறுவனம், பயணி ஒருவருக்கு பயண கட்டணமாக கிட்டத்தட்ட 60 மில்லியன் டாலர் (சுமார் ரூ.420 கோடி) வசூலிக்கும் என தெரிய வந்துள்ளது.

2001-ம் ஆண்டு அமெரிக்க தொழில் அதிபர் டென்னிஸ் டிட்டோ ரஷியாவுக்கு 20 மில்லியன் டாலர் (சுமார் ரூ.140 கோடி) கொடுத்து விண்வெளி பயணம் மேற்கொண்டது நினைவுகூரத்தக்கது.

You might also like

Comments are closed.