பார்வையற்றவர்களுக்கு வழிகாட்டும் ரோபோ நாய்

55

பார்வையற்றவர்களுடன் வாக்கிங் சென்றபடி அவர்களுக்கு வழிகாட்டக் கூடிய ரோபோ நாயை ஜப்பான் நிறுவனம் உருவாக்கி வருகிறது. ஜப்பானைச் சேர்ந்த பிரபல நிறுவனம் என்எஸ்கே கார்ப்பரேஷன். வாகன பேரிங்குகள், தொழிற்சாலைகளுக்குத் தேவையான பொருட்கள், தானியங்கி சாதனங்களுக்கான உதிரி பாகங்கள், ரோபோக்களில் பயன்படும் எலக்ட்ரானிக் பொருட்கள் ஆகியவற்றை தயாரித்து வருகிறது.

இந்நிறுவனம் ஜப்பானின் எலக்ட்ரோ கம்யூனிகேஷன்ஸ் பல்கலைக்கழகத்துடன் சேர்ந்து நாய் ரோபோ தயாரிக்கும் ஆய்வில் கடந்த 2005ம் ஆண்டு முதல் ஈடுபட்டுள்ளது. இந்த ஆய்வு தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இதுபற்றி என்எஸ்கே நிறுவன ஆராய்ச்சியாளர்கள் கூறியதாவது: பார்வையற்றவர்கள், மற்றவர்கள் துணையின்றி நடந்து செல்ல வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டு ரோபோ நாயை உருவாக்கியுள்ளோம்.

இதன் கன்ட்ரோல் யூனிட் கைப்பிடி பகுதியை பார்வையற்றவர்கள் பிடித்துக் கொள்ள வேண்டும். ரோபோவின் 4 கால்களிலும் சக்கரங்கள் உள்ளன. சமதளம் மட்டுமின்றி மேடு, பள்ளங்கள், படிக்கட்டுகளில்கூட இந்த ரோபோ ஏறிச் செல்லும். அதற்கேற்ப முன் பக்கம், பின் பக்கம் மடியுமாறு கால்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. எதிரே யாராவது வந்தாலோ, வேகத்தடை, கல் போன்றவை இருந்தாலோ குரைப்பது போல சத்தம் கொடுக்கும். தடைகளை கண்டுபிடிக்க ரோபோவின் முகப்பு மற்றும் கால் பகுதியில் சென்சார்கள், கமெராக்கள் உள்ளன. கன்ட்ரோல் யூனிட் கைப்பிடியில் உள்ள பட்டன்களை அழுத்தினால் எதிரே என்ன இருக்கிறது, வாகனங்கள் வருகிறதா என்பதை தெரிந்துகொள்ளலாம். கனிவான பெண் குரலில் இத்தகவல்களை ரோபோ நாய் தெரிவிக்கும்.

இறுதிகட்ட ஆய்வு முடிந்த பிறகு இது அறிமுகப்படுத்தப்படும். சொல்வதை புரிந்துகொள்ளும் திறன், ஜிபிஎஸ் உதவியுடன் தானாகவே ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு அழைத்து செல்வது ஆகிய வசதிகளை சேர்ப்பது தொடர்பான ஆய்வுகளும் நடந்து வருகிறது.

You might also like

Comments are closed.