காட்டுப்பசியும் KFCயும்

520

 2,611 total views

முதன் முதலில் KFC  கோழி தொடையை  2007லில் என் நண்பன் JJJ பெங்களூருக்கு நாங்கள் டூர் போன போது வாங்கிக் கொடுத்தான்.  பின்னர் KFC என்ற பெயரே எனக்கு மறந்து போனது. 2008இல் அமெரிக்க சென்ற போது கூட ஒரு KFC கடையும் என் கவனத்தில் படவில்லை.  வெளியே தனியாகப் போய் சாப்பிட பயந்து ஹோடெல் தொலைபேசி வழியாக வீணாப் போன Hamburger , Pizza  வாங்கி சாப்பிட்டேன்.  நான் சென்ற நிறுவன உரிமையாளர் ஒரு முக்கா மணிநேரம் கார் ஓட்டி ஒரு இந்தியன் உணவு விடுதிக்கு என்னை Pittsburgல் அழைத்துச் சென்றார். அங்கே அற்புதமான தோசை + தேங்கா சட்னி $8.

அதே போல் 8 நண்பர்களுடன் 2010இல் மலேசியா சிங்கப்பூர் போன போது தெருத் தெருவாக இந்திய உணவு விடுதிகளை தேடி சாப்பிட்டேன். சில இடங்களில் KFC, McDonalds.

மீண்டும் மனைவியுடன் மலேசியா, சிங்கப்பூர், Hong Kong, Macau  2012 இல் போன போது தினமும் McDonalds பர்கர் தான் காலை , மாலை உணவு. ஆனாலும் சிங்கப்பூரில் சிக்கிய அந்த தமிழ் உணவகத்தில் தோசை சாப்பிட்ட போது தான் ஏதோ உயிர் திரும்ப வந்தது போன்ற ஒரு மகிழ்ச்சி.

அட சமீபத்தில் தாய்லாந்து, காம்போடியா, லங்கவி போன போது கூட எங்கே எங்கே என இந்த உணவு விடுதிகளில் தான் நாங்கள் நண்பர்கள் நால்வரும் சாப்பிட்டோம். தவிர்க்க இயலாத இடங்களில் KFC மற்றும் உள்ளூர் உணவுகள்.

ஒரு மனிதனின் உணவுப் பழக்கம் என்பது தற்காலிகமாக எந்த ஒரு புதிய உணவையும் ஏற்றுக் கொள்ளும். ஆனால் அவனின் இயல்பான உணவு கண்ணில் பட்டவுடன் வரும் மகிழ்ச்சி மிக மிக அதிகமாக இருக்கும்.

பெரு நகரங்களில் வந்த KFC, MarryBrown இப்போது மதுரை வரை வந்து விட்டது. நம்மைப் போன்ற “இயல்பு / இயற்கை விரும்பிகள்” இவர்களின் கடைகளைப் பார்த்து நம் பாரம்பரிய உணவுகள் அழிந்துவிடுமோ என அஞ்சத் தேவையில்லை.

முதலில் பகட்டு காட்ட அங்கே உணவருந்த ஆரம்பிக்கும் நம் மக்கள் தற்காலிகமாக சில வருடங்களுக்கு அந்த உணவுகளைப் புகழ்ந்து சாப்பிட ஆரம்பிப்பர்.  இங்கே அவர்களின் நாக்கு என்ன சொல்கிறதோ அதன்படி தான் அவர்கள் நடப்பர்.

நண்பர்களுடன் சேர்ந்து நானும் ஒரு அப்படாக்கர் தான் எனக் காட்ட ஒரு பர்கரை சாப்பிட்டு விட்டு, பின்னி எடுக்கும் பசியால் வீட்டில் ஒரு கட்டு கட்டும் போதே போலியாக பர்கரைப் பத்தி ஒரு பெருமை பேசுவர்.

இந்திய மக்கள் எப்போதும் “சுய ஏமாளிகள்” தான். தனக்குத் தானே பல முட்டாள் கொள்கைகள் இருக்கும். அவை அனைத்தும் அடுத்தவன் என்ன நினைப்பான் என யோசித்து யோசித்து வடிவமைக்கப் பட்ட கொள்கைகள்.

இயல்பாகவும் எளிதாகவும் உள்ள எதையும் செய்தால் அடுத்தவன் ஏளனம் செய்வானோ என்ற பயம்.

அடுத்தவன் மாதிரி நாமும் இருந்தால் தான் பெருமை…

நாம் என்ற சுயத்தை மதிக்காமல் அடுத்தவன் எப்போதும் உயர்வானவன் என்ற தாழ்வு மனப்பான்மை எப்போதும் இருக்கும்.

இது “Normal Water ஆ இல்ல …… ” என சர்வர் கேட்க ஆரம்பிக்கும் போது துவங்குகிறது.  பின்னர் தேவையே இல்லாத பல துண்டுகள் நம் மேஜை மீது…

மனித மனம் என்பது எங்கே ஒரு பொருள் குறைவாகக் கிடைக்கிறதோ அதை அற்புதமாக நினைக்கும்.  மலேசியாவில் தோசையும்  மதுரையில் KFCயும்  கிடைக்காத அறிய பொருள்கள்.

இந்தியாவில் மக்கள் தொகையும் , அடுத்தவனை திருப்திப் படுத்த நினைக்கும் ஆட்டு மூளை ஆசாமிகளும் அதிகம். எனவே KFC, McDonalds, BurgerKing, MarryBrown போன்ற கடைகள் தெருவுக்கு தெரு வந்தாலும் வரும்.

என்னைப் பொருத்தவரை உணவு வகைகளை முறையாக சமைக்கத் தெரிந்த சமூகங்களில் தமிழ்ச் சமூகம் தான் முன்னோடி.  ஒவ்வொரு வேளை சாப்பிடும் போதும் மருத்துவ குணம் கொண்ட பொருள்களை உடன் சேர்த்து சாப்பிடும் பழக்கம் கண்டுபிடிக்கப் பட்டதே இங்கே தான்.

அவை அனைத்தும் அழிவின் விளிம்பில் உள்ளன. ஆனாலும் பகட்டு பல வருடம் நிற்காது. நம் பாரம்பரிய உணவுகளின் சிறப்புகள் அறியும் வெளிநாட்டவர் KFC போல்  ஒரு TNC (Tamil Natural Cook)  என ஆரம்பித்து கடை போட்டாலும் போடுவான்.

 

You might also like

Comments are closed.