புது அவதாரம் எடுத்துள்ள மைக்ரோசாப்ட்டின் Cortana

729

 2,020 total views

  கடந்த வருடம் விண்டோஸ்10-னை   அறிமுகபடுத்தியதிலிருந்தே  ஆப்பிளின்  Siri-யைப்  போன்ற வெர்ச்சுவல் அசிஸ்ட்டன்ட்   செயலிகளை விரைவில் கணினி திரையில் அறிமுகப்படுத்துமென  மைக்ரோசாப்ட் தெரிவித்திருந்தது.  அதன்படி மைக்ரோசாப்ட்டின் சிறிய டிஜிட்டல் உதவியாளனான Cortana-வில்  தற்போது முதற்கட்டமாக மக்களுக்கு பயன்படும் வகையிலான பல அம்சங்களை  வெளிக்கொணர்ந்துள்ளது.
அப்படி என்னதான் இருக்கும்  இந்த Cortanaவில் ?
                           கோர்ட்டானா என்பது   விண்டோஸ்10 சாதனங்களில் காணப்படும்  செயற்கை நுண்ணறிவுடன்  செயல்படக் கூடிய  ஒரு மனித உதவியாளன் ஆவான். உதாரணத்திற்கு “நான் தற்போது இருக்கும் இடத்திலிருந்து திருச்சிக்கு ஆகும் தொலைவு என்ன”? என்று கேட்டால்  அதற்கான சிறந்த பதிலை நொடிகளில் தரக் கூடியது. மற்றும் இது போன்ற பல செயல்களை மனிதனுக்கு  உதவும் ஒரு ரோபோவினைப் போன்று கூடவே இருந்து பதிலளிக்கக் கூடியது.  இதற்கு அதிகமாக உங்களது விரல்களை உபயோகிக்க தேவையிருக்காது. இது போன்ற செயலிகள் ஆப்பிளின் சாதனத்தில் இருந்து வந்த நேரத்தில் இதற்கு போட்டியாக மைக்ரோசாப்ட்டும் இந்த செயலியை கையில் எடுத்துள்ளது.  தற்போது இந்த Cortanaவினை  மற்ற சாதனங்களில் இருப்பதை விட  சிறந்த நுட்பத்துடன் கூடுதல் சிறப்புகளை அறிமுகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதன்படி நினைவூட்டல்களில் அனைவரும் வியக்கும்படியாக புதிதொரு நுட்பத்தை கையாண்டுள்ளனர்.
CortanaNew
  • சாதாரணமாக நினைவூட்டல்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு நினைவூட்டிச் செல்லாமல்  நினைவூட்டலில் புதியதோர் புரட்சிக்கு வழிவகுத்துள்ளது.  அது என்னவென்றால் “மார்கெட்டிற்கு  சென்று காய்கறிகள்   வாங்க வேண்டும்” என்பதை குறிப்பிட்ட நேரத்தில் நினைவூட்டாமல்  நாம் மார்கெட்டிற்கு செல்லும் வழியில் நமக்கு நினைவூட்டுகிறது. இதனால் ஒருவர் நோயாளிக்கென  அன்றாடம் வாங்க வேண்டிய மருந்துகளை நாம் மருந்தகம் வழியே செல்லும்போது நினைவூட்டும். ஆகையால் ஒருவர் அன்றாடம் செய்ய வேண்டிய வேலைகளை மறக்காமல் செய்ய சிறந்ததொரு வழியை ஏற்படுத்தித் தரும்.
  •   மேலும் உங்கள்  காலண்டர்  நியமனங்கள் (appointment) போன்றவற்றில் சிறந்ததொரு அனுபவத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் வழியே நீங்கள் சில சந்திப்புகளை நீங்கள் வேலை செய்யாத நாட்களுக்கு ஏற்படுத்தி வைத்திருந்தால் (வார இறுதி அல்லது மாலை நேரங்கள்)  Cortana  அதனை  உங்களுக்கு வலியுறுத்தி அதன் மூலம்  உங்களது   நியமனங்களை  வேறு ஒரு  நேரத்திற்கு மாற்றித்  தருகிறது. அல்லது உங்களுக்கு அந்த நேரத்தில் ஒத்துக்கபட்டிருக்கும் வேலையின் முக்கியத்துவத்தை அறிவுறுத்துகிறது.
  • நீங்கள் உங்கள் மின்னஞ்சலில்  உங்களது முதலாளிக்கோ  அல்லது உடன் பணி புரிவோருக்கோ “அடுத்த வாரம் இந்த வேலையை முடித்து தருகிறேன்” அல்லது “இரண்டு  நாட்களில் முடித்து தருகிறேன்” என்று கூறினால் Cortana உங்களுக்கு செய்து முடிக்க வேண்டிய கால அவகாசத்தை அடிக்கடி நினைவுபடுத்திக் கொண்டே இருக்கும். இதனால் உங்களது வாழ்க்கையில்  ஒவ்வொரு நாளும் செய்து முடிக்க வேண்டிய பல விசயங்களை Cortanaவின் தொடர் நினைவூட்டல்களின்  வழியே,  தவறாது செய்து முடிக்க Cortanaவழி செய்து தருகிறது.

                   செயற்கை நுண்ணறிவினை (Artificial Intelligence) தொழிநுட்ப நிறுவனங்கள்  படிப்படியாக   தங்களது  தொழில் நுட்பத்தில் புகுத்தி  அதன் மூலம் மனித வாழ்க்கையை தானியங்குமயமாக்குவதை குறிக்கோளாக்கி வருகின்றனர். 2016-இன் இறுதிக்குள்  மேலும் சில நிறுவனங்களும் தங்கள் சாதனங்களில் Siri, Cortana  போன்ற செயற்கை செயற்கை நுண்ணறிவு செயலிகளை  இணைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

                 இந்த அம்சங்களனைத்தும் தற்போது சோதனை நிமித்தமாகவே  செய்து வருகிறது. வெகு விரைவில் இத்துடன் இன்னும் கூடுதலான மேம்படுத்தப்பட்ட அம்சங்களையும் இணைத்து ios மற்றும்  Android பயனர்கள் அணுக ஏற்பாடுகள்  செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

You might also like

Comments are closed.