திறந்த மடலை எழுத விரும்புகிறீர்களா? உதவும் தளம்
1,418 total views
அமெரிக்க அதிபர் ஒபாமாவிற்கோ அல்லது கிரிக்கட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கருக்கோ திறந்த மடலை எழுத விரும்புகிறீர்களா? ஆம் என்றால் my open letter உங்களுக்காகவே உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தளத்தின் வாயிலாக நீங்கள் உலகில் உள்ள யாருக்கு வேண்டுமானாலும் திறந்த மடல் எழுதலாம். யாருக்கு கடிதத்தை எழுதுகிறீர்கள் என குறிப்பிட்டு உங்கள் பெயரையும் குறிப்பிட்டு கடிதத்தை எழுத துவங்கலாம்.
நாளிதழ்களில் அவ்வப்போது பிரபலங்கள் முக்கிய பிரச்னை குறித்து திறந்த மடல்களை எழுதுவதுண்டு. சில நேரங்களில் பத்திரிகைகளில் தொண்டர்களின் கடிதங்களும் திறந்த மடல்களாக வெளியாவதுண்டு. திறந்த மடல்கள் மூலம் முக்கிய விஷயங்கள் குறித்து வலுவான கருத்துக்களை தெரிவிக்கலாம். ஆனால் மின்னஞ்சல் யுகத்தில் கடிதங்கள் எழுதும் பழக்கமே அரிதாகி வருகிறது. இந்நிலையில் மின்னஞ்சல் வடிவில் திறந்த மடல்களை எழுதும் வசதியை ஏற்படுத்தித்
தரும் தளமாக my open letter தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கடிதம் எழுதுவதற்கான பகுதியில் வலைப்பதிவுகளில் காணப்படக்கூடிய அனைத்து வசதியும் இருக்கின்றன. கடித வரிகளை தேவையான இடங்களில் அடிக்குறிப்பு இடுவது, எழுத்துருக்களை மாற்றுவது, வண்ண எழுத்துக்களை சேர்ப்பது, புகைப்படங்களை இணைப்பது என பல்வேறு வசதிகள் இருக்கின்றன. தேவை ஏற்பட்டால் செய்திகளை மேற்கோளாகவும் இணைக்கலாம். இந்த கடிதத்தை இணைய வெளியில் பதிப்பிப்பதன் மூலம் திறந்த மடலை உலகின் பார்வைக்கு சமர்பிக்கலாம். கடிதத்தின் கீழ் மற்றவர்கள் அது குறித்து கருத்து தெரிவிப்பதற்கான வசதியும் இருக்கிறது. ஆர்வம் உள்ளவர்கள் இந்த தளம் மூலமாக திறந்த மடல்களை எழுதலாம். மற்றவர்கள் எழுதியுள்ள கடிதங்களை படித்து பார்த்து கருத்து தெரிவிக்கலாம்.
ஒரு வலைப்பதிவிலோ, டிவிட்டர் குறும்பதிவிலோ அல்லது பேஸ்புக் அப்டேட்டிலோ சொல்ல முடியாததை கடிதம் மூலம் சொல்லலாம். உலகின் கவனத்தை ஈர்க்கலாம். ஏற்கனவே குறிப்பிட்ட பிரச்னை தொடர்பாக உலகின் கவனத்தை ஈர்க்க இணையவாசிகளின் ஆதரவை திரட்ட petitions online போன்ற இணையம் வழி மனு போடும் தளங்கள் இருக்கின்றன. அந்த வகை தளங்களின் நீட்சியாக இந்த தளத்தை கருதலாம். தள முகவரி http://myopenletter.in/
Comments are closed.