500ரூ , 1000ரூ ஒழிப்பு உங்களை எப்படி பாதிக்கும்? – தமிழ்நுட்பத்தம்பி கார்த்திக்.

1,029

 2,606 total views

இன்று, இந்த வருடத்துடன் உங்கள் கையில் உள்ள ஐநூறு , ஆயிரம் ரூபாய் நோட்டுகளை எப்படி வங்கியில் செலுத்துவது எனும் எண்ணம் உங்களுக்கு வந்திருக்கும் அதையும் தாண்டி உங்கள் தனிநபர் / குடும்ப பொருளாதாரத்தை இது எப்படி பாதிக்கும் என நீங்கள் தெரிந்திருப்பது அவசியம்.
உங்கள் இடத்தை விற்காதீர்கள், உடனே வாங்காதீர்கள்:
 இடம் விற்பனை முன்பை விட மிக மிக குறைவாக இருக்கும்.
இவற்றை வாங்குவோர் கண்டிப்பாக தங்கள் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை எடுத்தே வாங்க வேண்டி வரும். இதனால் “வாங்குவோர்” எண்ணிக்கை மிக மிக குறைவாக இருக்கும். இதனால் விற்பனைக்காக காத்திருக்கும்  நிலங்கள் இன்னும் விற்பனை ஆகாது. வாங்க ஆள் இல்லாததால் இடங்களின் விலை மதிப்பு குறையும்.  முதலீட்டுக்காக இடங்கள், வீடுகள், அடுக்குமாடி வீடுகள் வாங்கியோர் மிகவும் பாதிக்கபடுவார்கள். ஒட்டுமொத்தமாக இந்திய அளவில் (தமிழ்நாடு ஏற்கனவே கிளு கிளுனு ரியல் எஸ்டேட் விற்பனை நடந்துகொண்டுள்ளது) வீடு, இடம் விலை மதிப்பு குறையும். வங்கிக் கணக்கில் பணம் உள்ள நிறுவனங்கள் எளிதாக இடம் , வீடு வாங்க முடியும் .
வங்கிக் கடன் எளிதாக கிடைக்கும்: 
இனி வங்கிக் கடன் கிடைப்பது மிக மிக எளிதாக இருக்கும், வீடு வாங்க அதிக ரொக்கம் தான் இதுவரை புழங்கி வந்தது . இனி ரொக்கம் உங்களின் வங்கிக்கணக்கில் இருந்து தான் பெற முடியும் என்பதாலும்  வாங்குவோர் எண்ணிகையை அதிகரித்து இந்த ஒட்டுமொத விலை வீழ்ச்சி ஏற்படாமல் இருக்கவும், இனி தாராளமாக வங்கிக் கடன் கொடுப்பார்கள். லோன் போட்டு கார், வீடு வாங்குவது ஊக்கப்படுத்தப்படும்.
தங்கம் வெள்ளி விலை:
நகைக்கடைகள் தான் அதிகமாக ரொக்க பணம் புழங்கும் இடம்.  ரியல் எஸ்டேட் போலவே தங்க நகை வாங்குவோர் எண்ணிக்கை கணிசமாக குறையும். இதனால் தேவை குறைவாக உள்ளதால் வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்குள் தங்கள் இறக்குமதி குறையும், கடைகளில் உள்ள தங்க விற்பனை மந்தமாவதால் தங்கம் வெள்ளி விலை குறையும்.
நீங்கள் செய்யவேண்டியது என்ன?  நகையாக அதிலும் கல் வைத்த நகையாக வாங்காமல் இந்த மந்த நிலையை பயன்படுத்தி , செதாரத்தில் நட்டமடையாமல் முடிந்த அளவு தங்கக் காசு, சிறிய தங்கக் கட்டியாக வாங்கி சேமிப்பது  நல்லது. தங்கம் விலை அடுத்த ஒன்பது மாதங்கள் இறங்குமுகமா இருக்கும். ஆக ஒரு மூன்று மாதம் கழித்து சந்தை நிலவரத்தை பார்த்து வாங்கவும். முதலீட்டுக்காக உங்களிடம் தங்கம் இருந்தால் வங்கியில் கொடுத்து நகை கடன் பெறுவது உங்களிடம் பணம் இருப்பு கிடைக்கும் அதை வைத்து சில மாதங்கள் கழித்து சந்தையில் குறைந்தவிலையில் தங்கம் வாங்கி சேமிக்கலாம். ஆனால் வங்கிகள் ஏற்கனவே முன்னெச்சரிக்கையாக தங்கத்திற்கான தங்களின் கடன் வழங்கும் உச்ச வரம்பு, மற்றும் கிராம் விலையை கண்டிப்பாக இந்த இரண்டு நாட்களுக்குள் மாற்றி விடுவார்கள்.
பங்கு வர்த்தகம், கமாடிட்டி முதலீடுகள்: 
தங்கம், வீடு, நிலம் விலை வீழ்ச்சியால் பங்கு நிறுவனங்கள் மற்றும் கம்மாடிட்டி ட்ரேடிங் நிறுவனங்கள் தங்களை நம்பகமான, பாதுகாப்பான  முதலீட்டு வழிமுறையாக விளம்பரம் செய்வார்கள். புதியவர்கள்  மற்றும்  பெரும்பாலானோர் இவற்றில் முதலீடு செய்வதை  அனைத்து பொருளாதார நிபுணர்களும், அரசும் ஊக்கபடுத்துவார்கள். ஏற்கனவே இவற்றில் நீங்கள் முதலீடு செய்திருந்தால் உங்கள் பங்குகளை உடனே  விற்பனை செய்யாதீர்கள். நல்ல விலையேற்றம் வரும் மாதங்களில் வரும் அப்பொழுது விற்று லாபம் பார்க்கலாம்.
இந்தியாவின் அதிகபட்ச ரூபாய் தாள் ஆயிரத்தில் இருந்து இரண்டாயிரமாக மாற்றம் அடையவுள்ளது எனும் செய்தி வந்தவுடன் பலரும் இந்திய பொருளாதாரம் வீழ்ச்சி , காந்தி படம் இல்லை என்பதை தான் பேசி வந்தார்கள். ஆனால் இது போல் புதிய அதிகபட்ச ரூபாய் நோட்டு வருகிறது என்றால் அதற்கு முந்தைய நோட்டை ஒழிக்கவேண்டியது அடிப்படை பொருளாதார விதி.  புதிய நோட்டு முந்தைய உச்சபட்ச நோட்டை விட இருநூறு சதம் அதிக மதிப்பு கொண்டது. இரண்டு நோட்டுகளும் புழக்கத்தில் இருந்தால் அது நாட்டின் ஒட்டுமொத பொருளாதார நிலையை நூறு சதம் அதிகமாக இழப்படைய செய்யும்.
இது ஏன் நடந்துள்ளது? 
எதோ மோடி முந்தாநாள் யோசித்து இன்னைக்கி சொன்னதா நினைக்க வேண்டாம். இன்று உலக அளவில் பின் வரும் காரணிகள் மோசமாக சென்றுகொண்டுள்ளன.
1.  கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவு சீன பொருளாதாரம் மெதுவாக வளர்ந்து வருகிறது .
2.  ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகுவதாக அறிவித்த தினத்தில் இருந்து ஜூன் முதல்  இன்று வரை பிரிட்டன் பவுண்ட் மதிப்பு 14% வீழ்ச்சியடைந்துள்ளது.
3. சீனா தனது பணம் “யுவான்” மதிப்பை தானாக முன் வந்து குறைத்தது.
4. பெட்ரோல் / கச்சா எண்ணெய் விலை சர்வதேச அளவில் மெதுவாக உயர்வது.
5. அமெரிக்க டாலர் மதிப்பை பிற நாடுகளின் மதிப்பை விட உயர்த்த அமேரிக்கா எடுத்தவரும் நடவடிக்கை.
மேற் சொன்ன ஐந்து பொருளாதார நகர்வுகளுடன் பிணைந்த ஒன்று தான் இந்திய பொருளாதாரம். இதில் இந்திய ரூபாயின் மதிப்பு அமெரிக்க டாலருக்கு நிகராக அதிகரிக்க வாய்ப்புள்ளது. இன்று ஒரு டாலர்  66.73 ரூபாயாக இருந்தது ஆனால் இது ஒரு பத்து சதம் வரை அதிகரித்து 59-60  ரூபாயாக நிலைகொள்ள வாய்ப்புள்ளது.
முடிந்தவரை உங்கள் பணத்தை வங்கியில் வைத்துவிட்டு செலவுகள் செய்யாமல், வீடு , அடுக்குமாடி வீடு , தங்கம் நகை  வாங்காமல் இருப்பது நல்லது.
கையில் இருக்கும் ரூபாய் நோட்டுகளை வங்கியில் செலுத்த , மாற்ற போகும் போது உங்களிடம் ஆதார் எண் கேட்டு கடுபேதினால் உங்கள் வாக்காளர் அட்டை, பான் கார்டு ஆகியவற்றை காட்டலாம். மற்றபடி இவர்கள் அறிமுகம் செய்யும் புதிய ஐநூறு, இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளில் இந்தி மொழி எண்களை பயன்படுத்தி உள்ளதற்கு என் வன்மையான கண்டனங்கள். இந்தி இந்தியாவின் ஆட்சி மொழி அல்ல ஆனால் தொடர்ந்து இவர்கள் கிடைக்கும் இடங்களில் எல்லாம் இந்தி திணிப்பை செய்துவருகிறார்கள். 
 –
தமிழ் நுட்பத் தம்பி  கார்த்திக்
(TechTamil Karthik)

You might also like

Comments are closed.