தமிழ் இணையதளங்களுக்கான விளம்பர சேவைக்கு மூடு விழா !

1,545

 4,010 total views

இணையம் பத்து வருடங்களுக்கு முன் இந்தியாவில் தொடக்க நிலையில் பிரபலமாகிக் கொண்டிருந்த சூழ்நிலையில் இந்திக்கு அடுத்து தமிழ் தான் அதிகமாக இந்திய இன்டர்நெட் உலகத்தை ஆக்கிரமித்து இருந்தது.

அந்த சமயங்களில் இணையம் அவ்வளவு வணிக நோக்குக்காக பயன்படுத்தப்படவில்லை. அதனால் அரசியல், இலங்கை, சினிமா தொடர்பான கட்டுரைகளே அதிகம் வெளிவந்தன.

ஆனால் தற்போது இணையம் என்பது வணிகத்தின் ஒரு முக்கிய அம்சமாக மாறி உள்ள சூழ்நிலையில் தமிழ் இணையுலகம் அந்த அளவு தம்மைத் தயார்படுத்திக் கொண்டுள்ளதா என்று கேட்டால் இல்லை என்றே சொல்ல முடியும்.

வளர்ந்து வரும் இணைய விளம்பர சந்தை, பின் தங்கும் தமிழ்

தற்போது தமிழ் இணையத்தை தமது கருத்தை பரிமாறும் டைரி போல் பயன்படுத்துபவர்கள் தான் அதிகமாக உள்ளனர். அதே நேரத்தில் பிறருக்கு பயன்படும் கட்டுரைகள் எழுதுவது என்பது தமிழில் குறைவாகவே உள்ளது.

பிறருக்கு பயன்படும் கட்டுரைகளை தொடர்ச்சியாக எழுத வேண்டும் என்றால் எழுதுபவருக்கு குறைந்த பட்ச வணிக பயன் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் காலப்போக்கில் சோர்வு காரணமாக தரமான கட்டுரைகள் வெளிவராது. அல்லது சீரான இடைவெளியிலும் கட்டுரைகள் வெளிவராது.

இணைய ஜாம்பவானான கூகுளின் முக்கிய வருமானம் விளம்பரங்களில் இருந்தே வருகிறது என்பது நமக்கு தெரியும். அதன் விளம்பர பிரிவான Adsense இன்னும் தமிழ் தளங்களுக்கு அனுமதி தருவதில்லை என்பது ஒரு ஒரு பெரிய தடையாக உள்ளது. மூன்று நாடுகளில் அலுவலக மொழியாக இருந்தும் நமக்கு இந்த நிலைமை.

அப்படியே தப்பி தவறி வேறு வழிகளில்(?) அனுமதி கிடைத்து விட்டாலும் கட்டுரைகளில் ஆங்கிலத்தை அதிகமாக பயன்படுத்தினால் தான் விளம்பரங்கள் அதிகம் வரும். இறுதியில் வாசகர்களுக்காக கட்டுரைகள் எழுத் வேண்டும் என்பது மாறி விளம்பரங்களுக்காக கட்டுரை எழுத வேண்டிய சூழ்நிலை வருகிறது.

இந்த சூழ்நிலையில் கடந்த வாரம் இந்தி மொழிக்கு Adsense அனுமதி கொடுத்துள்ளது என்பதையும் கருத்தில் கொள்க. இது இந்தியில் எழுதுபவர்களுக்கு கிடைத்த மிக அருமையான வாய்ப்பு.

மத்திய அரசு இந்தி மொழியை சிரம் எடுத்து மேலே கொண்டு வர முயற்சிக்கிறது. அதே அளவு முக்கியத்துவம் மற்ற மொழிகளுக்கு கிடைப்பதில்லை என்பது வருத்தமானதாக நிகழ்வு தான்.

ஆனாலும் இந்தியில் புழங்கப்படும் அளவு அதிக விளம்பரங்கள் தமிழில் இல்லாமையும் ஒரு முக்கிய பங்கை பெறுகிறது.

தமிழ் வணிகர்கள் இணையத்தை இன்னும் விளம்பர தளமாக பயன்படுத்த முன் வரவில்லை என்பது நமக்கு ஒரு பெருத்த பின்னடைவாகவே இருக்கிறது. அதே நேரத்தில் வருமானம் என்ற ஒன்று இல்லாமல் எல்லாரும் எப்பொழுதும் சேவை அடிப்ப்படையில் கட்டுரைகள் எழுதுவார்கள் என்றும எதிர்பார்க்க முடியாது.

அதனால் வணிகர்கள், துறை சம்பந்தப்பட்ட எழுத்தாளர்கள் என்று இரு பிரிவினரும் சேர்ந்து இந்த நிலையை மாற்ற முன் வர வேண்டும்.

உதாரனத்துக்கு தமிழ் தளங்களுக்காக ad30days.in என்ற தளம் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பத்தில் நல்ல திட்டங்களுடன் வந்த தளம் விளம்பரங்கள் தேவையான அளவு கிடைக்காததால் மூடப்பட்டது.

இணையத்தில் தமிழ் அடுத்தக் கட்டத்துக்கு செல்ல வேண்டும் என்றால் இந்த குறை நிச்சயம் நிவர்த்தி செய்யப்பட வேண்டும். இல்லாவிட்டால் வெறும் சினிமா கிசு கிசுக்களை மட்டும் தான் நாம் படித்தாக வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

தமிழர்கள்  பல துறைகளில் முன்னணியில் உள்ளனர். ஆனால் இந்த மாதிரியான பிரச்சினைகளால் அவர்கள் அனுபவமும், திறமையும் மற்றவர்களுக்கு கொண்டு செல்லப்படாமல் உள்ளது.

ஆசிரியர் அறிமுகம்:

கட்டுரை ஆசிரியர் ‘ராமா’ என்ற பெயரில் முதலீடு, பொருளாதாரம் தொடர்பான இணைய தளத்தை தமிழில் நடத்தி வருகிறார். அதன் இணைய தள முகவரி. www.revmuthal.com

You might also like

Comments are closed.