எம்.எஸ். ஆபீஸ் 365 ,கூகுள் டாக்ஸிற்கு நிகரான ஒரு தொகுப்பு பயன்பாட்டில்

597

 1,181 total views

மைக்ரோசாப்ட் நிறுவனம் எம்.எஸ். ஆபீஸ் மூலம் தன் உறுதியான இடத்தைத் தொடர்ந்து தக்க வைத்து வருகிறது. இணையத்தில் கூகுள் தன் சாதனங்களை அளித்து இணையப் பயனாளர்களில் பெரும் சனத்தொகையைத் தன் பக்கத்தில் வைத்துள்ளது.
இதனைப் பயன்படுத்தி, கூகுள் டாக்ஸ் (Google Docs) என்ற வசதியை இணையத்தில் தந்து, ஆபீஸ் தொகுப்பு பயன்பாட்டில், புதிய திசையையும் பயன்பாட்டு வழியையும் கூகுள் வழங்கி வருகிறது.

மைக்ரோசாப்ட் பதிலுக்கு, இணையத்துடன் கூடிய ஆபீஸ் மற்றும் பிற வசதிகளை அளிக்கும் வகையில் ஆபீஸ் 365 என்ற ஒரு இயக்கத்தினை அண்மையில் அறிமுகப்படுத்தியது. கிளவுட் கம்ப்யூட்டிங் இயக்க முறையில், ஆபீஸ் 365, டெஸ்க்டாப் கம்ப்யூட்டிங் வசதிகளை மக்களுக்குக் கொண்டு வந்துள்ளது.

சிறிய தொழில் நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களின் தகவல் தொழில் நுட்பத்திற்கான செலவினங்களை 50% அளவில் குறைக்கும் வகையில், மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்த ஆபீஸ் 365 என்ற புதிய வசதியைத் தந்துள்ளது.

இதன் மூலம் இணையம் வழியாக, மைக்ரோசாப்ட் வழங்கும், நிறுவனத்திற்கு மட்டுமேயான தனி மின்னஞ்சல் எக்சேஞ்ச் தொடர்பு வசதி, சர்வர் பயன்பாடு ஆகியவை கிடைக்கின்றன. பைல்கள், அழைப்புகள், கூடி விவாதம் செய்வது போன்ற நிர்வாக நடவடிக்கைகளை இதில் மேற்கொள்ளலாம். நிறுவனம் ஒன்றின் வேலையை, அதில் பணியாற்றுபவர் உலகின் எந்த மூலையிலிருந்தும் செயல் படுத்தலாம்.

இதனால், இவற்றை நிறுவ ஒரு நிறுவனம் செலவழிக்கும் மூலதனச் செலவு குறைகிறது. ஒரு பயனாளர் மாதம் ஒன்றுக்கு இரண்டு டாலர் கட்டணம் செலுத்தி இந்த வசதியைப் பெறலாம். கூடுதல் வசதிகளுக்கேற்ப, கட்டணம் அதிகரிக்கும். ஏற்கனவே சோதனை அடிப்படையில் 12,000 நிறுவனங்கள் இதனைக் கடந்த 45 நாட்களாகப் பயன்படுத்தி வந்துள்ளனர். உலக அளவில் இரண்டு லட்சம் பேர் பதிந்து பயன்படுத்துகின்றனர். இந்த வசதி 40 நாடுகளில் 20 மொழிகளில் ஏற்கனவே கிடைக்கிறது.

ஆபீஸ் 365 மற்றும் கூகுள் டாக்ஸ் இரண்டுமே, இணையத்தில் மட்டுமே கிடைக்கும் கம்ப்யூட்டிங் சாதனங்களாகும். கூகுள் டாக்ஸ் இணையத்திலேயே முழுக்க இயங்குகிறது. ஆபீஸ் 365 இயக்க, உங்கள் கம்ப்யூட்டரில் எம்.எஸ். ஆபீஸ் (ஆபீஸ் 2010 உகந்தது) இருந்தால் நல்லது. இல்லாமலும் இயக்கலாம். இணைய வழி தயாரித்த பைல்களை, கம்ப்யூட்டரிலும் ஆப் லைனில், இயக்கிப் பார்க்க எம்.எஸ்.ஆபீஸ் தொகுப்பு, கம்ப்யூட்டரில் இருப்பது அவசியம்.

ஆபீஸ் 365ல் இணைபவர்கள் நிச்சயம் இதனை உணர்ந்து, ஆபீஸ் தொகுப்பு ஒன்றைத் தங்கள் கம்ப்யூட்டரில் வைத்துக் கொள்வார்கள். ஆபீஸ் 365 உரிமக் கட்டணத்திலேயே, எம்.எஸ்.ஆபீஸ் தொகுப்பினையும் இயக்கலாம்.

நிறுவனங்களுக்காக, மைக்ரோசாப்ட் எக்சேஞ்ச் மற்றும் ஷேர் பாய்ண்ட் ஆகியவற்றை இயக்கி, அதனை நிர்வகிப்பதில் சிக்கல்களை எதிர் கொண்டு வருபவர்கள், கவலையை விடுத்து ஆபீஸ் 365 இயக்கத்தில் இணையலாம். எந்தக் கவலையும் இன்றி, எக்சேஞ்ச், ஷேர் பாய்ண்ட் மற்றும் ஓர் அலுவலகத்திற்குத் தேவையான அனைத்து வசதிகளும் கிடைக்கும்.

எந்த இணைய பிரவுசரிலும் இந்த இரண்டும் செயல்படும். இருப்பினும் ஆபீஸ் 365 இன்டர்நெட் எக்ஸ்புளோரிலும், கூகுள் டாக்ஸ் குரோம் பிரவுசரிலும் முழுமையான விளைவினைத் தருகின்றன. இதில், கூகுள் டாக்ஸ் ஒரு படி மேலாகச் சென்று, கூகுள் டாக்ஸ் பக்கத்தில், மஞ்சள் நிற டேப்பில், இன்டர்நெட் எக்ஸ்புளோரர், கூகுள் டாக்ஸ் தரும் அனைத்து வசதிகளையும் சப்போர்ட் செய்யாது என்று கூறுகிறது.

உலக அளவில், அலுவலகப் பணிகளுக்கு மைக்ரோசாப்ட் ஆபீஸ் பயன்பாடு தான் பெரும்பாலான இடங்களில் உள்ளது. எனவே இதனைப் பொறுத்தவரை ஆபீஸ் 365 அதிக பயனைத் தருகின்றது.

You might also like

Comments are closed.