விக்கிபீடியா வின் கருத்துசுதந்திரத்திற்கான இணைய இருட்டடிப்பு போராட்டம்

559

 1,079 total views


பொதுவுடைமை எண்ணங்களோடு வாழ்வதென்பதே மனிதர்களின் இயல்பான குணம். சிறு குழந்தைகளின் விளையாட்டுகளைப்பார்த்தாலே அது நமக்கு நன்கு புலப்படும். சட்டிப்பானை சோறாக்கி சாப்பிடுவதற்கு, ஒரு குழந்தை அரிசி கொண்டுவருவதும், மற்றொரு குழந்தை காய்கறி கொண்டுவருவதும், மற்றொரு குழந்தை தீப்பெட்டி கொண்டுவருவதும், மற்றொரு குழந்தை சுள்ளி பொறுக்கிவருவதும், எல்லாவற்றையும் சேர்த்து, சுவையான சோறாக்கி ஆளுக்கொரு வாய் சாப்பிட்டுவிட்டு மகிழ்வோடு அக்குழந்தைகள் வீடுதிரும்புவதும் அழகான உதாரணம்.

பகிர்ந்துவாழ்தல்தான் நம்முடைய இயல்பான குணாம்சம் என்று வாய்ப்பு கிடைக்கிறபோதெல்லாம் நாம் நிரூபிக்கவே செய்கிறோம். அதற்கு ‘விக்கிபீடியா’ மிகச்சரியான எடுத்துக்காட்டாகும்.
முன்பெல்லாம் காசுக்கு விற்பனையாகும் என்சைக்லோபீடியாக்களில் மட்டுமே ஒளிந்து கொண்டிருந்த அறிவானாது, இப்போது மக்கள் பங்களிப்போடு விக்கிபீடியா என்கிற பெயரில் இலவசமாக நம்பகத்தன்மையையும் இழக்காமல் இணையத்தில் வலம் வந்துகொண்டிருக்கிறது.
900 கோடி வார்த்தைகளுக்கும் மேலாகக்கொண்டு எழுதப்பட்ட 2.6 கோடி (ஆங்கிலம் – 38 லட்சம், இந்தி – 1 லட்சம், தமிழ் – 43 ஆயிரம்) கட்டுரைகளை உள்ளடக்கியதாக மாறியிருக்கிறது விக்கிபீடியா.
யாரும் யாரையும் கட்டாயப்படுத்தியோ சில தலைவர்களின் வழிநடத்தலிலோ இந்த வளர்ச்சியினை விக்கிபீடியா அடைந்துவிடவில்லை. முழுக்க முழுக்க மக்களின் பங்கேற்போடுதான் இது சாத்தியமாகியிருக்கிறது.
துவக்கத்தில் ஆங்கில விக்கிபீடியாவே உலகம் முழுவதிலும் பெரும்பாலும் பிரபலமாக இருந்து வந்தது. 90 சதவீத கட்டுரைகள் ஆங்கிலத்திலேயே இருந்தன. ஆனால் போகப்போக உலகின் பெரும்பான்மையான மொழிகளில் விக்கிபீடியாவில் கட்டுரைகள் வந்து குவியத்துவங்கின. இன்றைய நிலவரப்படி, ஒட்டுமொத்த கட்டுரைகளின் எண்ணிக்கையில் ஆங்கிலமல்லாத மொழிகள் 85 சதவீதம் (2 கோடிக்கும் மேல்) அடங்கும். கலை, அறிவியல், மொழி, இலக்கியம், அரசியல், விளையாட்டு என விக்கிபீடியா விட்டுவைக்காத துறையே இல்லையெனலாம். மக்களிடமே அதிகாரம் வந்துசேர்ந்தால், அதன் விளைவாக கிடைக்கும் பலம் எவ்விதப்பாகுபாடுமின்றி எல்லாமக்களுக்கும் சரிசமமாகக்கிடைக்கும் என்பதற்கு விக்கிபீடியாவே மிகப்பெரிய சான்று.
இந்திய மொழிகளில் விக்கிபீடியா:
ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், ஸ்பானிஷ், டச்சு போன்ற மொழிகளில் எழுதப்பட்டிருக்கிற அளவிற்கு இந்திய மொழிகளில் அதிகமான கட்டுரைகள் நீண்டகாலமாக எழுதப்படவில்லை. விக்கிபீடியாவின் பயன்பாட்டாளர்களாக மட்டுமே பெரும்பாலும் இருந்து வந்திருக்கிறோம். இந்தியில் 1 லட்சம் கட்டுரையும், நேவாரி மொழியில் 69 ஆயிரம் கட்டுரைகளும், தெலுஙகில் 49 ஆயிரம் கட்டுரைகளும், தமிழில் 43 ஆயிரம் கட்டுரைகளும் விக்கிபீடியாவில் இடம்பெற்றிருக்கின்றன. (3 கோடிக்கும் குறைவான மக்களே பேசும் டச்சு மொழியில்கூட 10 லட்சத்திற்கும் மேலான கட்டுரைகள் எழுதப்பட்டிருக்கிறது). கடந்த ஒன்றிரண்டு ஆண்டுகளில்தான் இந்நிலை சற்றே மாறத்துவங்கியிருக்கிறது.
அக்டோபர் மாத இந்திய மொழிகளுக்கான விக்கிபீடியாவின் புள்ளிவிவரங்களின் சில துளிகள்…
* இந்திய மொழிகளில் அதிக கட்டுரைகள் இடம்பெற்றிக்கிற இந்தி மொழியில் பெரிய அளவிலான பங்களிப்பு இப்போது இல்லை. ஆனால் தமிழ், மலையாளம் போன்ற மொழிகளில் மிக வேகமான வளர்ச்சியினைக்காண முடிகிறது.
* புதிய விக்கிபீடியா எழுத்தாளர்களாக பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை இந்திய மொழிகளிலேயே தமிழில்தான் அதிகம்.
* 100 கட்டுரைகளுக்கும் மேலாக சரியாக இருக்கிறதா என சரிபார்த்து திருத்தியவர்களின் எண்ணிக்கையும் இந்திய மொழிகளிலேயே தமிழில்தான் அதிகம்.
* நாளொன்றுக்கு சராசரியாக 76 கட்டுரைகள் புதியதாக தமிழில் எழுதப்படுகிறது. தமிழைத்தவிர மற்ற அனைத்து மொழிகளிலும் எழுதப்பட்ட கட்டுரைகளின் ஒட்டுமொத்த எண்ணிக்கையே 84 தான்.
* இந்தி (87 லட்சம்), மராத்தி (59 லட்சம்) ஆகிய மொழிகளுக்குப்பிறகு தமிழ் விக்கியை 47 லட்சம்பேர் வாசித்திருக்கிறார்கள் அக்டோபர் மாதத்தில்.
இதில் மிக மிக வருத்தமான செய்தி என்னவெனில், தமிழில் கட்டுரைகளை எழுதுவதும் திருத்தங்களை செய்வதும் வெறும் 93 பேர்தான். அவர்களிலும் வெறும் 25 பேர் மட்டுமே தொடர்ச்சியாக இயங்குகிறார்கள்.
வலைப்பதிவுகளிலும், சமூக வலைத்தளங்களிலும் ஏறத்தாழ ஒரு லட்சம் பேராவது பல நல்ல பயனுள்ள கட்டுரைகளை தமிழில் எழுதிக்கொண்டேதான்  இருக்கிறோம். ஆனால் அவற்றை விக்கிபீடியாவில் பதிவேற்றுவதில்லை. விக்கிபீடியாவில் எழுத, இக்கட்டுரையை வாசிக்கவும் : விக்கிப்பீடியா:முதல் கட்டுரை.
அமெரிக்காவின் புதிய சட்டம் சோபா (SOPA – Stop Online Piracy Act)
இரு பெரிய அமெரிக்க நிறுவனங்களின் (National Music Publishers’ Association , Motion Pictures Association of America ) வற்புறுத்தலின் பேரில் (பல இடைத்தரகு வேலைகளைச் செய்து), அமெரிக்க பிரதிநிகள் சபையில் ஒரு சட்ட முன்வரைவு வைக்கப்பட்டிருக்கிறது. இணையத்தில் அமெரிக்கா அல்லாத பிற நாட்டு இணையதளங்களின் உள்ளடக்கமும் செய்திகளும் அமெரிக்க காப்புரிமைச்சட்டத்தை மீறுமானால், அவற்றை அமெரிக்க மக்களின் பார்வையிலிருந்து நீக்குவதுதான் இச்சட்டத்தின் நோக்கமாக அவர்கள் முன்வைக்கிறார்கள்.
உதாரணத்திற்கு அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட திரைப்படத்தினை வேறு நாட்டிலிருந்து இயங்கும் ஏதோவொரு இணையதளம் வெளியிட்டிருக்குமானால், அவ்விணையதளத்தை அமெரிக்காவில் யாருமே பார்க்கமுடியாதவாறு தடை செய்ய வழிவகைகளை வகுக்கும் இச்சட்டம் என்பது அவர்களின் வாதம்.
இதனை எவ்வாறு செய்வார்கள்?
*அமெரிக்க நிறுவனமொன்றிற்கு சொந்தமான கட்டுரையோ/பாடலோ/படமோ வேறு நாட்டு இணையதளம் அதன் இணையதளத்தில் வெளியிடுகிறது எனக்கருதினால் அவ்விணையதளத்தினை தடைசெய்ய அமெரிக்க அரசு ஆணையிடலாம். (சோபா பிரிவு 104 )
* அவ்விணையதளத்தினை அமெரிக்காவில் மக்களுக்கு இணையம் வழுங்கும் நிறுவனங்கள் தடை செய்ய வேண்டுமென ஆணை பிறப்பிப்பது. உதாரணத்திற்கு யூட்யூபை இக்காரணத்திற்காக தடைசெய்தால், அமெரிக்கர்கள் இணைய உலாவியில் www.youtube.com என்று தட்டச்சு செய்து பார்த்தால், அவர்களுக்கு யூட்யூபின் இணையதளம் காணக்கிடைக்காது.
* கூகிள் போன்ற தேடியந்திரத்தில் தேடினாலும், அவ்விணையதளம் குறித்த எத்தகவலும் கொடுக்கக்கூடாது என்று தேடியந்திரங்களுக்கும் ஆணையிடுவது.
* அவ்விணையதளத்தின் பேபால் (paypal ) போன்ற இணைய வங்கிக்கணக்குகளும் முடக்கப்படுவது.
* அவ்விணையதளத்திற்கு அமெரிக்க நிறுவனங்கள் யாரும்  விளம்பரம் கொடுக்கக்கூடாதென்று ஆணையிடுவது.
* இத்தடைகள் அனைத்தும் ஐந்து நாட்களுக்குள் செய்துமுடிக்கப்படும்.
* தடை செய்யப்பட செய்தியினை சம்பந்தப்பட்ட இணையதளங்களுக்கு கடிதம் மூலமாகவோ, மின்னஞ்சல் மூலமாகவோ தெரிவிக்கப்படும்.
* சோபா பிரிவு 104 இன் படி, அமெரிக்க மக்களுக்கு இணையம் வழங்கும் நிறுவங்களுக்கும் இதனைத் தீர்மானிக்க உரிமை வழங்கப்படுகிறது. காப்புரிமையினை மீறுவதாக அவர்களுக்குத் தோன்றுகிற இணையதளங்களை மக்களிடத்திலிருந்து அவர்களேகூட மறைக்கலாம்.
* ‘அமெரிக்க நீதிமன்றத்திற்கு வந்து வழக்கை சந்திக்கத்தயார்’ என்று தடை செய்யப்பட இணையதளங்கள் அமெரிக்க அரசிற்கு முதலில் கடிதம் கொடுக்க வேண்டும். பிறகு அமெரிக்கா வந்து, வழக்கினை எதிர்கொண்டு வெற்றிபெறவேண்டும். அப்போதுதான் அவ்விணையதளங்கள் மீதான தடை நீக்கப்படும்.
இச்சட்டத்தின் விளைவுகள் என்ன?

*அமெரிக்க அரசு நிர்ணயிக்கும் குழுவோ அல்லது இணையசேவை வழங்கும் நிறுவங்களோ அனைத்தையும் தீர்மானிக்கும். அவர்கள் நினைத்தால் எதனை வேண்டுமானாலும் தடை செய்யலாம். மக்கள் எந்தெந்த இணையதளங்களை பார்க்கலாம், எதனையெல்லாம் பார்க்கக்கூடாதென்று அரசே தீர்மானிக்கும். உதாரணத்திற்கு, இணையசேவை வழங்கும் நிறுவனமான ‘காம்காஸ்ட்’தான் ‘என்.பி.சி.’ என்கிற தொலைக்காட்சியையும் வழங்குகிறது. அவர்களுக்குப் போட்டியாக இருக்கிற மற்ற அனைத்து இணையவழி தொலைக்காட்சிகளையும் தடைசெய்ய இச்சட்டம் வாய்ப்பாகிவிடும் (அதனால்தானோ என்னவோ காம்காஸ்ட்  இச்சட்டத்தை ஆதரிக்கிறது)
* மக்கள் ஊடகமாக இருக்கும் இணையமே, ஒட்டுமொத்தமாக தனிநபர்களும் கார்ப்போரேட் நிறுவனங்களும் நிர்வகிக்கும்,தீர்மானிக்கும் நிலைக்குத்தள்ளப்பட்டுவிடும்.
* அரசுக்கு எதிராக உருவாகிற கருத்துகள் தடை செய்யப்பட்டுவிடும். ‘வால்ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்புப்போராட்டத்திற்கே இணையவழியாகத்தான் பெரும்பாலான ஆதரவு திரட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இனி அதனையெல்லாம் அரசு அனுமதிக்காது
* இணையத்தில் இயங்கிவரும் பெரும்பாலான் இணையதளங்களால் தங்களது இணையதளங்கள் தடை செய்யப்பட்டால், நிச்சயமாக அவர்களால் அமெரிக்காவிற்கு சென்று வழக்கை எதிர்கொள்ளமுடியாது. எனவே கேட்பாரற்று அவர்களின் இணையதளங்கள் அனைத்தும் தடைசெய்யப்படும் அபாயம் இருக்கிறது.
* வலைப்பதிவர்கள் பெரும்பாலும், இலவசமாகக் கிடைக்கிற வசதிகளை வைத்துக்கொண்டே எழுதிவருகிறார்கள். அவர்களுக்கும் இதே நிலைதான்.
* சமூக வலைத்தளங்களில் இயங்குவோருக்கும் இதே நிலைதான். நமது கருத்துகள் இருட்டடிப்பு செய்யப்பட்டுவிடும்.
* காப்புரிமை என்று சொல்லி கொண்டுவரப்படும் இச்சட்டம் கருத்துரிமையை அடியோடு அழித்துவிடும்.
விக்கிபீடியாவும் எவ்வாறு ‘சோபா’வால் பாதிக்கப்படும்?

இரண்டரை கோடி கட்டுரைகளை உள்ளடக்கிய விக்கிபீடியாவில், எல்லாக்கட்டுரைகளிலும் “வெளியிணைப்புகள்” (External links ) என்கிற பகுதி இருக்கிறது. கட்டுரைகளின் நம்பகத்தன்மையினை அதிகரிக்க, ஆதாரங்களாக இவ்வெளியிணைப்புகள் இடம்பெற்றிருக்கிறது. அவையாவும் இச்சட்டத்தால், அயல்நாட்டு இணையத்தள சுட்டிகள் என்று அடையாளம் காணப்பட்டு, அப்பக்கங்களை விக்கிபீடியாவிலிருந்து நீக்க ஆணையிடமுடியும். அதனால், விக்கிபீடியா கோடிக்கணக்கான வழக்குகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இச்சூழலில், மக்களால் மக்களுக்காக நடத்தப்படுகிற விக்கிபீடியாவால் கோடிக்கணக்கான வழக்குகளை எதிர்த்து நீதிமன்றங்களிலேயே குடியிருந்து வழக்காடமுடியாது.
இச்சட்டத்தை எதிர்த்து, சனவரி 18 ஆம் தேதி, இணைய இருட்டடிப்பு போராட்டம் அறிவித்திருக்கிறது. விக்கிபீடியா வரலாற்றிலேயே மிகப்பெரிய போராட்டம் இது. உலகம் முழுவதும், விக்கிபீடியாவின் ஆங்கில இணையதளம் இதில் பங்குபெறும். 
இது ஏதோ அமெரிக்காவில் மட்டும் அமலாகப்போகிற சட்டம்தானே, நமக்கு எந்த பாதிப்புமில்லையே என்றிருக்கமுடியாது… இந்தியா, இஸ்ரேல், ஸ்பெயின் போன்ற நாடுகளின் அரசுகள் ‘சோபா’ சட்டத்தால் ஏற்கனவே ஈர்க்கப்பட்டுவிட்டன. அமெரிக்காவில் ‘சோபா’ அமல்படுத்தப்பட்டபின் தத்தமது நாடுகளில் அதனை பிரதி எடுக்கக்காத்துக்கொண்டிருக்கின்றன.
மன்னராட்சியில் மன்னர் குடும்பங்களை எதிர்த்துப்பேசினால் மரணதண்டனை என்றும், சர்வாதிகார ஆட்சியில் சர்வாதிகாரியை எதிர்த்தால் சாவுமணி என்றும், காலனிய ஆட்சிகளில் வாயே திறக்கமுடியாத வன்கொடுமை என்றும், நூற்றாண்டுகளாக இழந்திருந்த பேச்சுரிமையினை போராடித்தான் உலக மக்கள்  பெற்றிருக்கிறோம். அதனை ‘சோபா’ போன்ற சட்டங்கள் மூலம் ‘நாங்கள் என்ன பேசவேண்டும், எதனைச்செய்ய வேண்டும்’   என்று தீர்மானிக்கநினைக்கிற அரசுகளின், கார்ப்போரேட்டுகளின் காலடியில் போட நாங்க தயாராகயில்லை… ஏற்கனவே இருக்கிற ஊடகங்கள் எல்லாம் பெருமுதலாளிகளிடம்தான் குடிகொண்டிருக்கிறது…

 

You might also like

Comments are closed.