ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு விவகாரம்: மத்திய மந்திரி பதவியில் இருந்து ஆ.ராசா ராஜினாமா

831

 1,701 total views

`2ஜி’ ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக புகார் கூறப்பட்டது. இந்த முறைகேட்டுக்கு பொறுப்பு ஏற்று தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை மந்திரி ஆ.ராசா ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வற்புறுத்தி வந்தன.
அத்துடன் இந்த கோரிக்கையை வலியுறுத்தி பாராளுமன்ற நடவடிக்கைகளையும் ஸ்தம்பிக்கச் செய்தன.இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு சென்னை வந்த மந்திரி ஆ.ராசா முதல்- அமைச்சர் கருணாநிதியை சந்தித்து பேசினார்.
நேற்று மாலை விமானம் மூலம் ஆ.ராசா டெல்லி சென்றார். டெல்லி போய் சேர்ந்ததும் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து, அவர் தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார்.
இது குறித்து தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
1999 முதல் மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப துறை எந்த முறையை பின்பற்றி `2ஜி’ ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டைச் செய்து வந்ததோ, அதே முறையைப் பின்பற்றிய ஆ.ராசாவை அமைச்சர் பொறுப்பில் இருந்து விலக்க வேண்டும் என்று சில எதிர்க்கட்சியினர் திட்டமிட்டு நாடாளுமன்ற நடவடிக்கைகளை ஸ்தம்பிக்கச் செய்து வருகின்றனர்.
நாடாளுமன்றத்தின் ஜனநாயக நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறவும், நாட்டு மக்களுக்கு தேவையான பிரச்சினைகள் விவாதித்து முடிவு எடுக்கப்படவும் வழி வகுத்திடும் வகையில், ஆ.ராசாவை அமைச்சர் பொறுப்பில் இருந்து இன்றிரவே விலக்கிக் கொள்ள வேண்டும் என்று கழகம் முடிவெடுத்து, அவருக்கு அறிவுறுத்தி உள்ளது.
இது தொடர்பாக கழகத் தலைவரும், தமிழக முதல்-அமைச்சருமான கருணாநிதியின் விரிவான அறிக்கை தனியே வெளியிடப்படுகிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. ஊழல் புகார் குற்றச்சாட்டுகள் மீது மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பாராளுமன்றத்தை நடத்த விடமாட்டோம் என்று பாரதீய ஜனதா, இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எச்சரிக்கை விடுத்து இருந்தன.
இதைத்தொடர்ந்து, பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளை சமாளிப்பது குறித்து காங்கிரஸ் மேலிடம் நேற்று அவசர ஆலோசனை நடத்தியது. மறைந்த முன்னாள் பிரதமர் நேருவின் பிறந்தநாளையொட்டி, நேற்று பாராளுமன்ற கட்டிடத்தில் உள்ள நேரு படத்துக்கு தலைவர்கள் மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.
அந்த நிகழ்ச்சி முடிவடைந்த பிறகு, பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் பாராளுமன்ற கட்டிடத்திலேயே ஆலோசனையில் ஈடுபட்டனர். மத்திய நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி, சோனியாவின் அரசியல் செயலாளர் அகமது பட்டேல் ஆகியோரும் இந்த ஆலோசனையில் கலந்து கொண்டனர்.
ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு பிரச்சினை தொடர்பாக எழுந்துள்ள நெருக்கடிக்கு தீர்வு காண்பது குறித்தும், பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளை எப்படி சமாளிப்பது என்பது பற்றியும் அவர்கள் விவாதித்தனர்.
பிறகு நிருபர்களுக்கு பேட்டி அளித்த பிரணாப் முகர்ஜி, “பாராளுமன்றம் நடந்து கொண்டிருப்பதால், ராசா பற்றி என்ன சொல்ல வேண்டுமோ, அதை பாராளுமன்றத்தில் சொல்வோம்” என்று கூறினார்

You might also like

Comments are closed.