​கழிப்பறை தொட்டியிலும், கருவறையிலும் துன்பப்படுவோரைக் காப்போம்.

1,019

 696 total views

மனிதனின் உடல் உழைப்பையும், சிந்தனை திறனையும் செய்ய பல துறைகளில் இன்று எந்திரங்களின் பயன்பாடு வந்துள்ளது. இதனால் பல துறைகளில் பண ரீதியான வளர்ச்சி அடைந்துள்ளதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம்.

எந்திரங்களின் பயன்பாட்டின் முக்கிய இரண்டு கரணங்கள், குறைந்த நேரத்தில் அதிக வேலை, குறைந்த செலவில் அதிக வேலை. மனிதனின் திறனை விட பலமடங்கில் வேலை. இது உலகம் முழுவதும் இருந்தாலும் தமிழ்நாட்டு / இந்தியா  அளவில் இரண்டு வேலைகளில் எந்திரங்களின் பயன்பாடு வரவேண்டும்.

#1. கோவில் அர்ச்சனை பணி
#2. துப்புரவு பணி

#1. கோவில் அர்ச்சனை பணி

சமஸ்கிருதர்கள் இருட்டான குறுகலான அறையில் வேர்க்க விறுவிறுக்க, நெருப்பு, விளக்கெண்ணெய், கசகசக்கும் திரவங்கள் சூழ, அரைகுறை ஆடை உடுத்தி வேலை செய்து பக்தர்கள் தரும் தட்சணைக்காக வேலை செய்கிறார்கள்.

#2. துப்புரவு பணி
இருட்டான பாதாள சாக்கடை  தொட்டிக்குள் இறங்கி, அரைகுறை ஆடையில் கழிவுகளை வாளியில் அள்ளி வெளியில் போட்டுவிட்டு சில்லறை ஊதியம் பெற்று செல்கிறார்கள்.

#1. கோவில் அர்ச்சனை பணி :

தீர்வு தான் என்ன?

அன்று தீப்பந்தம் – இன்று டியூப் லைட்
அன்று பறையும் / மேளமும் – இன்று மேளமடிக்கும் எந்திரம்
அன்று வரிசை – இன்று டோக்கன்
அன்று பசு நெய் – இன்று பாக்கெட் நெய்
அன்று முரசொலி அறிவிப்பு – இன்று மைக் செட்
அன்று கொத்துக் கல் தளம் – இன்று மார்பில் / கிரானைட்
அன்று ஓலை – இன்று பிட் நோட்டீஸ், வெப்சைட்
அன்று ஆறுகால பூசை – இன்று லைவ் ஸ்ட்ரீமிங் பூசை

சமஸ்கிருதம், தமிழ் (அந்தந்த மாநில மொழிகள்) மொழிகளில் அனைத்து பரிகார / பிரார்த்தனை மந்திரங்களையும் பதிவு செய்து, பக்தர்கள் சொல்லும் பெயர் , ராசி , நட்சத்திரத்தை ஒரு மைக் வைத்து உள்வாங்கி, கார் தொழிற்சாலைகளில் உள்ளது  போன்ற எளிய மின்சார கைகள் சிலவற்றை கருவறையில் பொருத்தி தீபம் காட்டுதல், மாலை போடுதல், அர்ச்சனை மந்திரங்களை ஒலிக்க செய்தல், அபிஷேகம் செய்தல், பின்பு திருநீறு, குங்குமம் கொடுத்தல் என வேலைகளை செய்யும் இரண்டு கருவிகளை அனைத்து கோவில்களிலும் பொருத்திவிடலாம். செவ்வாய்க்கு விண்கலம் அனுப்பும் வல்லரசு இந்தியாவில் இதை செய்ய முடியாதா என்ன? சமஸ்கிருத மொழி கணினிக்கு உகந்த மொழி என பல மேடைகளில் சமஸ்கிருதர்கள் சொல்லி வருகிறார்கள். பக்தர்களின் விருப்பப்படி எந்த மொழியில் அர்ச்சனை செய்ய வேண்டும் என்பதை அவர்களே தனி கட்டணம் கட்டி அந்த எந்திரத்தை நடத்த சொல்லலாம்.

#2. துப்புரவு பணி

பொதுப்பணித்துறையும், கல்வித் துறையும் சரியாக செய்யப்பட்டிருந்தால் சாக்கடை அடைப்பை எடுக்க தனியாக ஆள் தேவையில்லை. மேட்டில் இருந்து பள்ளத்தில் நீர் ஓடும் எனும் அடிப்படை அறிவே இல்லாமல் தான் சாக்கடைகள் ஊர் முழுவதும் கட்டப்பட்டுள்ளன.  சாக்கடையில் திரவ கழிவுகளை போட வேண்டும், குப்பை தொட்டியில் திட கழிவுகளை போட வேண்டும் எனும் அடிப்படை அறிவு இல்லாத மனிதர்களாகவே நாம் இருக்கிறோம், ஆக வேறு ஒரு நபர் வந்து சாக்கடையையும், குப்பைத்தொட்டியையும் கையாள வேண்டியுள்ளது. குறைந்த பட்ச பாதுகாப்பு உபகரணங்கள்(முகமூடி, நீர்புகா முழங்கால்வரை செருப்பு, கிருமி நாசினி, கையுறை, மாற்று ஆடை) என அனைத்தும் வழங்க வேண்டும். அடுத்ததாக தற்போது உள்ள இந்திய வகை கழிப்பறைகள் தானே காற்று அழுத்தப்பட்ட தண்ணீரை பீய்ச்சி அடித்து சுத்தம் செய்யும் வகையில் புதிய தொழில்நுட்பம் தேவை. பிற பெரிய நகரங்களை போல கடல் நீரை கழிப்பறை பயன்பாட்டு நீராக பயன்படுத்தும் புதிய வகை நீர் மேலாண்மையை கொண்டுவர வேண்டும். சமூகத்தில் அவரவர் கழிவை அவரே சுத்தம் செய்வது இழிவானதல்ல அதற்கு வேறு ஒருவர் வரவேண்டும் என நினைப்பதே இழிவானது என உணரவேண்டும்.  சாக்கடை/ செப்டிக் டேங்கில் உள்ள மனித கழிவுகளை எளிய எந்திரங்கள் மூலம் உரமாக.எரிவாயுவாக மாற்றும் எந்திரங்களை பொருத்தி, நவீன மனிதன் தானே தயாரிக்கும் தரமான பொருளான அவனது கழிவே அவனுக்கு பொருளாதார ரீதியாக உதவும் வகையில் மாற்ற வேண்டும்.
இந்த இரண்டு துறைகளும் பொருளாதார ரீதியில் பயன் தராமல் போனாலும், சமூகத்தில் மனிதர்களுக்குள் உள்ள ஏற்றத்தாழ்வுகளை நீக்க முயற்சிக்கும் முதல் படியாக இருக்கும் என தீர்க்கமாக நம்புகிறேன்.  அனைவரும் போகத்துடிக்கும் கோவில் கருவறையில், எவரும் போக விரும்பாத பாதாள சாக்கடையிலும் இருக்கும் மனிதர்களை வெளியேற்றி முழு எந்திரமயமாக்கல் வருவதே உளவியல் ரீதியான சாதி ஏற்ற தாழ்வை சமூகத்தில் இருந்து நீக்கும்.
– ​TechTamil கார்த்திக்​

You might also like

Comments are closed.