உங்கள் மூளையின் மூன்று ஆப்களும், மனஅழுத்தம் & தூக்கமின்மை பிரச்சனைகளும் – TechTamil கார்த்திக்

1,045

 691 total views

தூக்கம் ஏன் வருகிறது?

மனித மூளை 24 மணிநேரமும் ஏதோ ஒரு வேகத்தில் செயல்பட்டுக்கொண்டே  இருக்கிறது. அது மிக குறைந்த ஆற்றலை பயன்படுத்தி ஓய்வு எடுப்பதை தூக்கம் எனச்  சொல்கிறோம். அப்பொழுதும் அது சில வேலைகளை செய்துகொண்டே தான் இருக்கும், அந்த நாளில் நடந்த முக்கிய நிகழ்வுகளை நினைவகத்தில் சேமிக்கும், நீங்கள் எந்த கையால் டீ கோப்பையை பிடித்து அருந்தினீர்கள் எனும் தேவையில்லாத தகவல்களை நீக்கும், நீங்கள் கற்றுக்கொண்ட ஏதோ ஒரு புதிய விஷயத்தை உங்களின் ஏற்கனவே  உள்ள திறமைகளுடன் தொடர்புபடுத்தி, உடலின் பாகங்கள் எதிர்காலத்தில் அதற்கு எப்படி உடன்பட்டு நடக்க வேண்டும் எனும் தகவல்களை மீளாய்வு செய்து அடுக்கும் வேலைகள், உங்கள் விருப்பம், ஆசைகளை ஒரு எண்ண அதிர்வலைகளாக (கனவுகளாக) வெளிப்படுத்துதல் போன்ற வேலைகளை அது செய்யும். அப்பொழுது உடல் பாகங்களின் செயல்பாடு பற்றிய பெரிய வேலை எதையும்  அது செய்வதில்லை. உடல் சோர்வு, துக்க(அழுகைக்கு) வெளிப்பாட்டுக்கு பின், சிந்திக்க/கவனிக்க ஏதும் இல்லாத நேரங்களில் தூக்கம் வருகிறது.

ஏன் தூங்க முடிவதில்லை?

விழித்திருக்கும் 16 மணிநேரங்களில் நம் மூளையின் ஒரு பாகம்(மூளை ஆப் 1)   நமது உடல் சார்ந்த நடவடிக்கைகளை கவனிப்பது போல. நம் மனநலம் சோகம், கவலைகள், பிரச்சனைகள், ஏக்கம், பகல் கனவுகள் , இலட்சியம், தோல்விகள், வேலை/தொழில் திட்டமிடுதல், எதிர்காலம் பற்றிய பயம், எதிர்கால திட்டமிடுதல் போன்ற விஷயங்களுக்காக பல நிமிடங்கள் முதல் சில மணிநேரங்கள் வரை ஒதுக்கி, அவை பற்றிய முடிவுகளை, ஆறுதல்களை, யோசனைகளை, எதிர்கொள்ளும் யுக்திகளை  மனதுக்கு சொல்லும் பொறுப்பும் மூளையின் மற்றொரு பாகத்திற்கு(மூளை ஆப் 2) உள்ளது. மூளையின் ஒவ்வொரு பாகத்தையும் ஒரு ஆப்(app) என கருதினால் உங்களுக்கு புரியும் என நினைக்கிறன்.

ஆனால் ஒரு நாளில் நாம் ஆப் 2 ஐ திறந்து  கண்களை மூடியோ அல்லது ஒரு வெட்டவெளியை பார்த்தோ அல்லது ஒரு அறைக்குள் சுவற்றை பார்த்தோ, ஒரு அணில், நாய்க்குட்டியை பார்த்துக்கொண்டோ நம் மனநலம் பற்றி நமக்குள் நாமே ஒரு உரையாடலை செய்வதில்லை.  பார்வை வழி உணர்வுகளை கையாளும் மூளை ஆப் 3 ஐ பயன்படுத்தி அதிகப்படியான நேரம் மொபைல்,டீவி, இணையத்தில் வீடியோக்களை பார்ப்பதில் செலவிடுகிறோம். மொபைல் விளையாட்டுக்கள், வாட்சப் ஸ்டேட்டஸ் பதிவுகள் என பார்த்துக்கொண்டே, படுக்க போகும் சில நிமிடங்களுக்கு முன் அலைபேசியை அணைத்துவிட்டு படுக்கிறோம்.

இதுவரை சுமார் 60 கிலோமீட்டர் வேகத்தில்(ஒரு உதாரணத்திற்கு) பயணித்த உங்கள் மூளையின் கவனம்(ஆப் 3), நீங்கள் அலைபேசியை அணைத்து வைத்தவுடன், கண்களை மூடியவுடன் (உடல் பாகங்களை கவனிக்க வேண்டிய தேவை ஏதும் இல்லை), உடனே அதே வேகத்தில் உங்களுடன் மூளை ஆப் 2 ஐ திறந்து  உரையாட ஆரம்பிக்கும். நாள் முழுவதும் அது காத்திருந்த விஷயங்களை ஒவ்வொன்றாக உங்கள் முன் அடுக்க ஆரம்பிக்கும். அவையெல்லாம் ஒரு விதத்தில் நீங்கள் பாக்கி வைத்துவிட்டு போன பழைய கணக்குகள். நீங்கள் அவற்றை பற்றி நிதானமாக சிந்திக்க நேரம் ஒதுக்காமல் இருந்துள்ளதால் இது தான் சரியான நேரம் என மூளை ஆப் 2 நினைக்கிறது.  ஏன் என்றால் நீங்கள் நாள் முழுவதும் மூளையின் வேறு ஆப் களில் நேரம் செல்வழிக்கிறீர்கள்.

உங்களிடம் நீங்கள் உரையாட எவ்வளவு விஷயம் பாக்கி உள்ளதோ அத்தனை மடங்கு நேரம்  நீங்கள் தூக்கம் வராமல் பிரண்டுப்பிரண்டு படுத்துக்கொண்டு இருப்பீர்கள்.

நாளாக நாளாக இப்படி நீங்கள் உங்களுடன் உரையாடல் செய்யாமல் தவிர்த்து பாக்கி  வைத்த விஷயங்கள், அடிக்கடி பயன்படுத்தாக, அப்டேட் செய்யாத இந்த ஆப் 2 தன்னை தானே கிராஷ் (Crash) செய்ய முயற்சிக்கும். மன அழுத்தம், மன  சோர்வு, அதீத துக்கம், தற்கொலை எண்ணம், விரக்தி, எதிலும் ஆர்வமில்லாமல் நடந்துகொள்வது மன நிலைகளை ஏற்படுத்தும். இந்த ஆப் கிராஷ் ஆகும்போது மொத்த போனும் சிதைந்து சரியாக வேலை செய்யாமல் போகும்.

 

குறுக்கு வழிகளை தவிர்ப்பது நல்லது:

இதற்கு குறுக்கு வழியாக சிலர் தூக்கமாத்திரை உண்பது, தூங்குவதற்கு முன் உடல் சோர்வு ஏற்படுத்த (அதீத உடற்பயிற்சி, உடலுறவு, சுயஇன்பம்), மது அருந்துவது போன்றவற்றை செய்கிறார்கள். இது உடலையையும், மூளையையும் மயக்க / சோர்வு நிலைக்கு கொண்டு சென்று தூக்கத்தை தருமே ஒழிய உங்கள் மன நலத்தை மேம்படுத்தாது.  நீங்கள் உற்சாகமாக உணரவோ, மகிழ்ச்சியாக உணரவோ, இயல்பாக தூங்கவோ செய்யாமல் தடுப்பதில் இணைய பயன்பாடு உளவியல் ரீதியாக மிக முக்கியமான தடைக்கல்லாக இருக்கிறது.

மனித உணர்வுகளை(ஆப் 3) மழுங்கடிக்கும்  சமூக வலைத்தளங்கள் / வீடியோக்கள்:

மனிதனுக்கு உண்டான உணர்வுகள் மகிழ்ச்சி, துக்கம், கோவம், ஆத்திரம், ஏக்கம், நிராசை, பொறாமை, வெறுப்பு, காதல் ரசனை, ஆணவம், விரக்தி, காமம், பயம், பரிவு, பரிதாபம், நம்பிக்கை, அவநம்பிக்கை, ஆச்சர்யம், சிலிர்ப்பு ஆகியவை அனைத்தும் உங்களுக்கு ஒரே நாளில் கிடைக்க வாய்ப்பில்லை.  ஒரு வீதியில் நீங்கள் நிற்கிறீர்கள் ஒரு அழகான பெண், துள்ளி விளையாடும் நாய்க்குட்டிகள், படுகொலை செய்யப்பட்ட நபர், உங்களை அவமானப்படுத்திய நபரின் எள்ளல், நகைச்சுவை நிகழ்வு, ஆச்சரிய வானவில், சிலிர்க்கவைக்கும் தகவல், பரிதாபத்துக்குரிய அடிபட்ட பறவை, உங்களுக்கு பிடித்த கார், மற்றொரு நகைச்சுவை நிகழ்வு  என அனைத்தும் ஒரே நாளில், அடுத்தது காண/உணர வாய்ப்புள்ளதா?

 

நிச்சயமாக இல்லை. ஆனால் ஒரு 5 அங்குலம் (இன்ச்) திரையில்  மேற்சொன்ன அனைத்தும் ஒரு சில நிமிடங்களில் உங்களுக்கு காட்டப்படுகிறது, உங்கள் மனம் (ஆப் 3)  வெவ்வேறு உணர்வுகளை ஒரு வினாடி வித்தியாசத்தில் அடுத்தது மாற்றி அனுபவிக்கிறது. சமூக வலைத்தளங்கள் அடுத்தது தகவல்களை வெவ்வேறு உணர்வுக்குள் தூண்டும் விதமோ அல்லது ஒரே வகை உணர்வை தூண்டும் தகவல்களையோ  கொடுத்துக்கொண்டே இருக்கிறது. உங்களால் அந்த உணர்வு தூண்டல் சிறையில் இருந்து வெளி வர முடியாது, ஏன் என்றால் அது எளிமையாக இருக்கிறது, உங்கள் சோகம், கவலை(மூளை ஆப் 2ஐ திறந்தால்) பற்றி சிந்திக்க நேரம் செலவழிப்பது என்பது கஷ்டமான செயல். நீங்கள் அதைத்  தவிர்த்து உங்கள் மூளையின் வேறு ஒரு பாகத்திற்கு (உணர்வு தூண்டல் மூளை ஆப் 3) தகவலை தொடர்ந்து பார்க்குமாறு அனுப்பி மற்றொரு பாகத்தை அதன் வேலையை செய்யவிடாமல் தடுக்கிறீர்கள்.

 

இதனால் மூளையின் ஒரு பாகம்(ஆப் 2) உங்களை தூங்கும் நேரத்தில் வந்து உங்களைப்பற்றி உங்களிடம் பேசுமாறு தொந்தரவு செய்கிறது. நீங்கள் எப்பொழுது ஆப் 1 & ஆப் 3 ஐ மூடுவீர்கள் என காத்திருக்கிறது. சிலருக்கு இந்த காத்திருப்பு நாட்கணக்கில், வாரக்கணக்கில் இருக்கிறது. இதனால் அவர்களுக்கு தனக்கு தானே உரையாடும் வாய்ப்பு இல்லாமல் போகிறது. ஏதோ ஒரு தன்னம்பிக்கை வீடியோ அல்லது சாமியார் சொல்லும் ஒரு உபதேசத்தை கேட்கும் போது அது ஆப் 2க்கு தேவையான தகவல் ஆதலால் அவர்கள் சாமியாருக்கு அடிமையாகிறார்கள். இந்தக்கால மக்கள் தனக்கு தானே  உரையாடல் செய்வதில்லை என்பதை அறிந்த சாமியார்கள் இவர்களின் மன நல பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்கிறேன் என தற்காலிகமாக ஆப் 2 ஐ மக்களை திறக்க வைத்து, அவர்களை மெய் சிலிர்க்கச்செய்து நன்கொடைகளை அள்ளுகிறார்கள். மற்றொரு பாகம் அதிக உணர்வுகளை குறைந்த இடைவெளியில் அனுபவித்து அனுபவித்து உணர்வு மழுங்கிய நிலைக்கு உங்களை நாள் முழுவதும் தள்ளிக்கொண்டு இருக்கிறது. இதுபற்றி நான் பேசிய காணொளி ஒன்று உள்ளது அதையும் அவசியம் பார்க்கவும்.

தீர்வுகள்:


மனம் ஓய்வெடுக்க:

  1. தூங்க இலக்காக நீங்கள் வைத்திருக்கும் நேரத்தில் ஒரு 2 மணிநேரத்திற்கு முன்பு உங்கள் திரைகள் அனைத்தையும் அணைக்கவும். (அலைபேசி, ஐபேட், லேப்டாப், கணினி, தொலைக்காட்சி பேட்டி). கண்களை மூடி மெதுவாக இந்த ஒரு நாளில் நடந்த விஷயங்கள் பற்றியும், உங்கள் வாழ்வில் நடந்த மிக மகிழ்ச்சியான, பெருமையான நிகழ்வுகள் ஒவ்வொன்றாக எண்ணிப் பார்க்கவும்.
  2. ஏதேனும் ஒரு புத்தகத்தை தூக்கம் வரும் வரை படிப்பது என முடிவெடுத்து வாசித்துக்கொண்டே இருக்கவும்.
  3. காலை எழுந்ததும் மொட்டை மாடிக்கு சென்று அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டே பிரச்சனைகளை பற்றி ஆராய்வது.
  4. தூங்க போகும் சில நேரம் முன்பு இதுவரை நீங்கள் சமாளித்து வந்த பிற பிரச்சனைகள் பற்றியும் உங்களால் பிறவற்றையும் தீர்க்கும் ஆற்றல் உள்ளது என உங்களுக்கு நீங்களே தைரியம் சொல்லிக்கொண்டு, பிற மகிழ்ச்சியான நிகழ்வுகளை எண்ணிக்கொண்டும் தூங்கலாம்.

 

உடல் ஓய்வெடுக்க:

  1. தூங்க ஒரு மணிநேரம் முன்பு வெதுவெதுப்பான சுடுநீரில் குளிக்கவும்.
  2. குறுக்கு வழிகளாக நான் மேற்சொன்னதில் மாத்திரை & மது தவிர்த்து பிறவற்றை செய்யலாம்.

 

செய்யக்கூடாதவை:

  1. தூக்கமாத்திரை
  2. மது
  3. தன்னம்பிக்கை பேச்சாளர்கள் அறிவுரைகளை கேட்பது
  4. அனைத்து வித சாமியார்களின் உபதேசங்களை கேட்பது

மூளையை 60 கிலோமீட்டர் வேகத்தில் ஒட்டிக்கொண்டு இருக்கும் போது சட்டென பிரேக் போடுவது விபத்தில் தான் முடியும், அதை மெதுவாக்கி, ஆசுவாசப்படுத்தி ஓய்வெடுக்க வைக்க திரைகளில் இருந்து ஒதுங்கி இருப்பது நீங்கள் வாழ்வில் சாதிக்கவும், நாள் முழுவதும் உற்சாக ஆற்றல் மிக்கவராக உணரவும் மிகவும் உதவும். வாழ்த்துக்களுடன் கார்த்திக்.

உங்களுக்கு வேறு ஏதும் ஆலோசனை தூக்கமின்மை, மன அழுத்தத்தை தவிர்க்க வழிகள் / ஆலோசனைகள் இருந்தால் தெரியப்படுத்தவும்.

You might also like

Comments are closed.