ஓபன் சோர்ஸ் என்றால் என்ன ?

875

 4,091 total views

இக்கட்டுரை மொசில்லாவின் நீமோ (NeMo) திட்டத்தின் சார்பாக இங்கு சமர்ப்பிக்கப்பட்டது. நீமோ திட்டத்தை பற்றி அடுத்த கட்டுரையில் விரிவாகக் காணலாம்.  இக்கட்டுரையில்,ஓபன் சோர்ஸ் பற்றி சிறிது அறிந்துகொள்வோமா…!

 

ஓபன் சோர்ஸ்

ஓபன் சோர்ஸ்…! நீங்கள் ஒரு கணினி ஆர்வலராக இருப்பின் இந்த வார்த்தை உங்களுக்கு புதிதாக இருக்க வாய்ப்புகள் மிக மிக குறைவேயாகும்.சரி…! அப்படி என்றால் என்ன ? ம்ம்ம்…! ஓபன் சோர்ஸ் என்ற வார்த்தைக்கு பல அர்த்தங்கள் உண்டு . ஆனால் , நாம் காண இருப்பது சாப்ட்வேர் அல்லது மென்பொருள் சார்ந்ததையே ஆகும். பயப்படவேண்டாம் , நான் மிக எளிய பாணியில் உங்களுக்கு ஓபன் சோர்ஸ் பற்றி விளக்குகிறேன்.

ஓபன் சோர்ஸ் என்பது ஒரு நிறுவனத்தின் பெயரோ , அவைகளின் தயாரிப்போ அல்ல…! ஓபன் சோர்ஸ் என்ற வார்த்தை பெரும்பாலும் கூட்டு மென்பொருள் உருவாக்க முறையிலேயே பயன்படுத்தப்படுகிறது. இம்முறையில் , மென்பொருளின் மூலக் குறியீடுகள் (கட்டமைப்புகள்) வெளிப்படையாக போடப்படுவதால் , நம்மால் இதனை பார்க்க , மாற்ற , பகிர மற்றும் பயன்படுத்தவும் முடியும். தனியுரிம மென்பொருள்களில் , மொத்த மென்பொருளும் ஒரே ஒரு நிறுவனத்தால் உருவாக்கப்பட்டவையாகும்.ஓபன் சோர்ஸ் மென்பொருள் பெரும்பாலும் தன்னார்வ சமூகங்கள் மற்றும் உலகம் முழுவதும் உள்ள புரோகிராமர்களால் பங்களிக்கப்பட்டவையே ஆகும். பிரபலமான ஓபன் சோர்ஸ் உபாயங்கள் : மொசில்லா பையர்பாக்ஸ் உலவி (Browser) , பெடோரா போன்றவை குறிப்பிடத்தக்கது.

இது எங்கு தொடங்கியது ?

ஓபன் சோர்ஸ் தொடர்புடைய விஷயங்கள் 40 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கப்பட்டவை.ஐபிஎம் நிறுவனம் தான் முதல் தலைமுறை கணினிகளை செய்து, அதனை இயக்க மென்பொருள் தொகுப்பை உருவாக்கியது.இவை அணைத்தும் இலவசம் மட்டுமின்றி பயனர்களின் மத்தியில் மறுவிநியோகம் செய்யத்தக்கவை.அதன் மூல குறியீடுகளையும் நம் தேவைக்கு ஏற்றார்போல் மாற்றி அமைத்துக்கொள்ளலாம். ஆனால் , 1970 ஆம் ஆண்டு ஐபிம் தனது மென்பொருள் படைப்புகளை தனியுரிமை மென்பொருளாக மாற்றியதால் , மக்களால் முன்பே பதிவு செய்யப்பட்ட மென்பொருள்களை மாற்றி அமைக்க இயலவில்லை.

அச்சமயத்திலேயே உண்மையான இலவச மென்பொருள் இயக்கம் தொடங்கியது. 1980 ஆம் ஆண்டு , ரிச்சர்ட் ஸ்டால்மன் என்பவரே ஓபன் சோர்ஸ் மென்பொருள் பயன்பாட்டினை, தனது GNU திட்டத்தின் மூலம் பிரபலமாக்கினர். அதன் குறிக்கோள் கணினியை இயக்க பயன்படும் மூலப்பொருளான இயக்கு தளத்தையும் , கணினி சார்ந்த மென்பொருள் தொகுப்புகளையும் இலவசமாக உபயோகிக்கவும் , மாற்றுவதற்கும் கிடைக்க செய்வதே ஆகும். ” மென்பொருள் தொகுப்புகளை அனைவராலும் இலவசமாக மாற்றம் செய்ய கிடைப்பது ஒரு அடிப்படை உரிமையாகும்” என்பது அவரின் கருத்து.

ஓபன் சோர்ஸ் நமக்குத் தேவையா ?

இன்று நாம் உபயோகிக்கும் பல மென்பொருட்கள் , உடைமையாளர்களின் படைப்பாகும். எனவே , இந்த மென்பொருள்களை நாம் பணம் செலுத்தி பெற வேண்டியுள்ளது. பலர் தங்கள் தேவைக்கேற்ற மென்பொருள் சாதனங்களை பணப்பற்றாக்குறையினால் வாங்க முடியவில்லை. ஏழை நாடுகளில் உள்ள அறிவியலாளர்களும் மாணவர்களுமே மிகவும் பாதிக்கப்படுகின்றனர். இக்குறைபாடு அந்த நாடுகளின் வளர்ச்சியையே பாதிக்கும். இதனால் , அறிவியல் சமூகம் அதனுடைய ஆற்றலை உணராமலேயே போய்விடுகின்றது.

ஆனால் , ஓபன் சோர்ஸ் மென்பொருட்கள் , எப்போதும் மக்களுக்கே முன்னுரிமை அளிக்கிறது. இதன் உருவாக்கத்தில் பல்வேறு தரப்பினரின் பங்களிப்பும் இருப்பதனால் இம்முறையில் தயாரிக்கப்படும் மென்பொருட்களில் புதுமை காணப்படும். முக்கியமாக ஓபன் சோர்ஸ் மென்பொருட்கள் முற்றிலும் இலவசம் !

ஆகவே , ஓபன் சோர்ஸ் திட்டமானது மக்கள் , சமுதாயம் மற்றும் ஒவ்வொரு குடிமகனின் முன்னேற்றத்திற்கும் வழி வகுக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை…!இதனாலேயே கணினி மற்றும் இணையத்தின் ஆற்றல் முழுமையாக கிடைப்பதை உணரமுடியும்.

 

நீங்கள் மொசில்லாவிற்கு பங்களிக்க விரும்பினால்தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி : [email protected]

By: தமிழ்

You might also like

Comments are closed.