824 total views
“குளிர்காலத்தில் இது
உடம்புக்கு நல்லதுப்பா !”
“எப்பவாச்சும் எடுத்துக்கிட்டா தப்பில்லையே !”
“அப்பப்போ சேர்த்துக்கிட்டா
இதயத்துக்கு நல்லாதாம்ல !”,
போன்ற சப்பைக்கட்டுகளுடனே
பெரும்பாலான நேரங்களில் நாம் அதை
விலை கொடுத்து வாங்குகிறோம்
கூடவே ஓரிரு நெகிழிக் கோப்பைகளையும்…
ஆரம்பத்தில் அளவு சரி பார்த்து
கோப்பைகளில் பரிமாறப்படுகிறது
சந்தோச துக்க தருணங்கள்…
புலனறியாத பொழுதுகளில்
மயக்கும் மன்மத நீர்மம்
குருதியுடன் புணர்ந்த பின்னர்
அளவுகளைத் தொலைத்து
எக்குத் தப்பாய் நிறைத்து
வழியவிடுகிறோம் கோப்பைகளை…
நிலவை நாலாய் மடித்து
அதனோரத்தில் நட்சத்திரங்கள் தெளித்த
சிவப்புப் பூ ஒன்றை ஒட்டிப் பரிசளிக்கிறோம்
அவர்களின் கூந்தல்முடி கலைந்ததற்கு
காற்றுடன் கத்திச் சண்டை போடுகிறோம்
நாய்களின் பூனைகளின்
பெயர் வைத்தழைத்து சிரித்துக் கொள்கிறோம்
ஒரு நொடி பிரிந்தாலும் உயிர்விடுவேனென்று
பரஸ்பரம் பிதற்றிக் கொண்டு அலைகிறோம்…
சலித்துத் தீர்ந்த நொடியில்
மறுப்பேதுமின்றி அமைதியாக எழுந்து
தெளிந்த சிந்தையுடன் கைகுலுக்கி
ஒருவரையொருவர் திரும்பிப் பாராமல்
வேறு வேறு திசையில் நடக்கிறோம்…
போகிற வழியில் இருவரும்
சர்வ சாதாரணமாக
கசக்கி எரிகிறோம்
அந்த நெகிழிக் கோப்பைகளை,
நட்பென்ற பெயரில்
நாம் பழகித் திரியும்
சில காதல்களைப் போல…!

தொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.
Prev Post
Next Post
You might also like
Comments are closed.