கண்ணாடிச் சிதறல்கள்

474

 1,014 total views

வீட்டின் முன்பகுதில் நட்டிருந்த மூங்கில்கள்
பூவிட்டிருந்த ஒரு அதிகாலைப் பொழுதில்
கிரணங்கள் தீட்டிய சித்திரம் போல நீ வந்திருந்தாய்
என்னைத் தவிர மற்ற அனைவரிடமும் பேசிக்கொண்டிருந்த
உன்னைப் பிரதியெடுக்க பிரயத்தனப்பட்டன…
என் வீட்டின் நிலைக் கண்ணாடிகள் அனைத்தும்
ஆனால் கையலம்பும் குழாய்க்கு மேலே தொங்கும்
பழைய கண்ணாடிக்கு மட்டுமே அன்று யோகம் போல
உனக்கு அந்தக் கண்ணாடியை
நினைவிருக்குமா எனத் தெரியவில்லை
பச்சை நிறத்தில் சட்டம் கட்டியிருக்கும்
ஓரங்களில் லேசாக உப்புப் படிந்திருக்கும்
நேற்று முன்தினம் அந்தக் கண்ணாடி
அதை மாட்டி வைத்திருந்த
ஆணியில் இருந்து கழன்று
கீழே விழுந்து தெறித்தது !
இத்தனை நாட்களாக
உன் முகத்தை
நினைவுகொள்ள முயன்று
தோற்றதால் இருக்கலாம்…
சிதறிக் கிடந்த சில்லுகள் ஒவ்வொன்றையும்
உற்றுப் பார்க்கிறேன் – அவை
உன்னைத் தவிர வேறு எதையெதையோ
பிரதிபலித்துக் கொண்டிருக்கின்றன…!

அன்புடன்,
அவனி அரவிந்தன்
.
வெண்ணிலா பக்கங்கள்

You might also like

Comments are closed.