நூறு, ஆயிரம், கோடி, பத்துகோடி எண்கள்

552

 995 total views

பத்தினுடைய பத்து மடங்கு எனப்படும் நூறு சிறப்புடையது.  மகாபாரதத்தில் சகோதரர்கள் நூறு பேர் “கௌரவர்கள்” என்னும் சிறப்புடைய பெயர் பெற்றவர்கள். சூதிலே தருமன் மனைவி, சகோதரர், நாடு என அனைத்தையும் இழந்தான். அச்சூதாடிகள் அடையும் இழிநிலையை சென்னபோதார்.

ஒன்று எய்தி நூறு இழக்கும் சூதர்க்கும் உண்டாம் கொல்.
நன்றுஎய்தி வாழ்வதோர் ஆறு ( 932 )
ஒருமடங்கு பொருளை சூதில் வெல்வதுபோல் தோன்றினாலும் நூறுமடங்கு பொருளை சூதில் இழக்கின்ற சூதாடிகள் நன்மைபெற்று வாழ வழி இல்லை என்கிறார்.
அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர் செகுத்து உண்ணாமை நன்று ( 259 )
நெய் முதலான பொருட்களை இட்டு செயபடுகின்ற ஆயிரம் வேள்விகளை விட ஓர் உயிரைக் கொல்லாமல் இருப்பது என்பது அவ்வேள்விகளால் கிடைக்கும் நன்மையை விட அதிகமாகும்.
ஆயிரதைக் காட்டிலும் கோடி என்பது மிக அதிகமான எண்ணிக்கை. ஒரே நாளில் ஒளவையாரிடம் நான்குகோடி பாடல்கள் கேட்க அவ்வையாரும் தன் பாடல் அடிகளில் “கோடி” என்ற சொல் இடம்பெற நான்குவரியில் நான்குகோடி எழுதினார் என்று சுவையான இலக்கிய நிகழ்ச்சி உண்டு. மதியாதார் தலை வாசல் மிதியாமை கோடியுறும் என்று தன் பாடலில் குறிப்பிட்டுள்ளார்.
வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கும் துயித்தல் அரிது. ( 373 )
ஊழின் துணை இல்லாமல் முயன்று கோடிக் கணக்கான பொருள்களைச் சேர்த்தவர்க்கும் அவற்றை நுகரமுடியது.
அவ்வாறு கோடி கணக்கான பொருட்களை நுகரமுடியாமல் போனாலும் அகத்தில் அன்பு இல்லாமல் முகத்தால் நகைப்பவரால் வரும் துன்பம் பத்துக்கோடியையும் தாண்டும் என்கிறார்.
நகை வகையர் ஆகிய நட்பின் பகைவரால்
பத்தடுத்த கோடி உறும் ( 817 )
அக நட்பு இல்லாத நண்பரைவிட பகைவரால் வரும் தீமை கூட பத்துகோடி மடங்கு நன்மையாகும்.
முடிவுரை : வான்புகழ் வள்ளுவர் தந்த திருக்குறளும் 1330௦ பாக்கள் என்றும் 133 அதிகாரங்கள் என்றும் அதிகாரத்திற்கு 10 குறட்பாக்கள் என்றும் முப்பெரும் பால்களைக் கொண்டதென்றும், திருக்குறளுக்கு உரை வகுத்தவர் பதின்மர் என்றும், பதிண் எண்கீழ்கணக்கு நூல்களில் ஒன்று என்றும் திருக்குறளின் பெருமையை எண்ணில் அடக்க அதன் புகழ் எண்ணில் அடங்காமல் ஏற்றத்தோடு திகழ்கிறது.
எண்ணில்லா வாழ்க்கை ஏற்றமின்றிப் போகும்.
வாழ்க தமிழ் ! வளர்க வையகம் !!
ச. சித்ரா

You might also like

Comments are closed.