நோக்கியா சென்னை ஆலையில் நடந்தது என்ன?

பின்லாந்து நாட்டைச் சேர்ந்த நோக்கியா கைபேசி தயாரிப்பு நிறுவனம் கடந்த 2006 முதல் திருபெரும்புதூர் சிப்காட் வளாகத்தில் சிறப்பு பொருளாதார மண்டலத்தில்(SEZ) கைப்பேசித் தொழிற்சாலையை தொடங்கி நடத்தி வந்தது. இந்நிறுவனத்திற்கு இந்திய அரசும், தமிழக அரசும் போட்டிப் போட்டுக் கொண்டு சலுகைகளை வாரி வழங்கின.

நோக்கியாவில் பணிபுரிந்தவர்கள் மற்றும் அதன் உதிரி பாகங்கள் தயாரிப்பு நிறுவனங்களில் வேலை பார்த்தவர்கள் என மொத்தம் 31,000க்கும் மேற்பட்டவர்கள் நேரடியாக மற்றும் மறைமுகமாக இதனால் வேலை வாய்ப்பை பெற்றனர்.

ரூ.620 கோடி ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்ட நோக்கியா நிறுவனம் கடந்த 8 ஆண்டுகளில் ஆயிரம் கோடி ரூபாய்க்கு வரிச்சலுகைப் பெற்றுள்ளது. ஏறத்தாழ 25 ஆயிரம் கோடி ரூபாய் லாபத் தொகையாக பின்லாந்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. இது தொடர்பாக வருமான வரித்துறை இந்த நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்து, இதன் சொத்துகளை முடக்கியுள்ளது.

நோக்கியா நிறுவனத்தின் அனைத்து செல்போன் தயாரிப்பு மற்றும் அது தொடர்பான சேவைகளை மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துக்கு விற்பதாக கடந்த 2013-ஆம் ஆண்டு செப்டம்பரில் அறிவித்தது. இந்த விற்பனை ஒப்பந்தம் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நிறைவேறியது.

ஆனால், நோக்கியா நிறுவனத்துக்கு எதிராக வருமான வரித்துறை தொடுத்திருந்த வழக்கு நிலுவையில் இருந்த காரணத்தால், சென்னையில் இருந்து 45 கிலோ மீட்டர் தூரத்தில் திருபெரும்புதுரில் அமைந்த நோக்கியா செல்போன் ஆலை மைக்ரோசாஃப்டுக்கு கைமாறவில்லை. இந்நிலையில், தமிழ்நாடு அரசு ரூ. 2,400 கோடி வரி இழப்பீடு கோரி வழக்கு ஒன்றைத் தொடர்ந்தது. அது தவிர, வருமானவரி தொடர்பான மற்றொரு வழக்கில், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துக்கு சொத்துகளைக் கைமாற்றுவதற்கு முன்னர், நோக்கியா இந்தியா ரூ. 3,500 கோடிக்கான உத்திரவாதத் தொகையை நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் இவ்வாண்டு மார்ச் மாதம் உத்தரவிட்டது. இவை காரணமாக, சென்னை ஆலையானது தொடர்ந்து நோக்கியாவின் வசமே இருந்து வருகிறது.

சென்னையிலுள்ள நோக்கியா செல்போன் தயாரிப்பு ஆலையை நவம்பர் முதல் தேதியிலிருந்து மூட முடிவு செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. நவம்பர் ஒன்றை அவர்கள் “உற்பத்தி இல்லாத நாள்” என அறிவித்துள்ளனர். இதில் பணிபுரியும் தொழிலாளர்களில் சிலர் விருப்ப ஒய்வு பெற சம்மதித்துள்ளனர்.

 

Related Posts

Leave a Reply