மாபெரும் தொழில்நுட்ப சிக்கலுக்கு உங்களிடம் தீர்வு உண்டா? 6 கோடி வரை பரிசு தொகை கிடைக்க வாய்ப்பு.

2,002

 743 total views

டெக்தமிழ் வாசகர்களுக்கு வணக்கம், இன்றைய தொழில்நுட்ப உலகத்தில் புதிய வரவான பிளாக் செயினின்  (blockchain) மிக முக்கியமான சிக்கலாக அதன் கட்டமைப்பு வளர்ச்சி வரம்பு உள்ளது.
நீங்கள் பிட்காயின் பற்றிய செய்தி ஏதும் கேள்விப்பட்டிருந்தால் கண்டிப்பாக இந்த சிக்கல் குறித்தும் கேள்விப்பட்டிருப்பீர்கள். அதாவது ஒரு பிட்காயின் பரிவர்த்தனை செய்ய ஆகும் நேரம் வர வர அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஒட்டு மொத்த பிட்காயின் நெட்ஒர்க்கில் ஒரு வினாடிக்கு எட்டு பரிவர்த்தனைகள் மட்டுமே மேற்கொள்ள முடியும். இதனால் ஒவ்வொரு புதிய பரிவர்தனையும் சுமார் 30 நிமிடங்கள் முதல் 2 மணிநேரம் வரை காத்திருக்க வேண்டும். சில நாட்களில் அதிக அளவில் பரிவர்த்தனைகள் நடக்கும் போது இது ஒரு நாள் எனும் அளவில் கூட தாமதமாகிறது.
பிட்காயின் என்பது முழுக்க முழுக்க பண பரிவர்த்தனை மட்டுமே நடக்கும். அனால் எதிரியம் (Ethereum) என்பதில் Smart Contracts எனும் வகை மென்பொருள் போல சில கணினி நிரல்களை எழுதி குறிப்பிட்ட விதிகள் அல்லது நேரம் வந்தவுடன் பண பரிவர்த்தனை செய்யலாம் எனவும் எழுத முடியும். உதாரணத்திற்கு ஒவ்வொருமாதமும் 30ம் நாளில் இந்த முகவரியில் உள்ள பணத்தை எடுத்து இவருக்கு வாடகையாக கொடுக்கவும் என நிரல் எழுதிவிட்டால் அது தானாகவே நடக்கும் (இது ஒரு மொக்கை உதாரணம் இதில் பல அசாத்திய வடிவங்களில் நிரல்கள் வந்துகொண்டுள்ளன)
இப்படி எதிரியம் பிளாக் செயின் மீது பல உப பண வடிவங்களும் வந்துள்ளதால் இந்த வலையமைப்பும் வளர்ச்சி சிக்கலுக்கு உள்ளாகியுள்ளது. இதன் தீர்வாக மூன்று கோணங்களில் சிந்திக்கலாம் என எதிரியம் பணத்தை உருவாக்கிய விடாலிக் சொல்கிறார்.
1. பரிவர்த்தனைகள் கொண்ட ஒரு தொகுதி (பிளாக்) யின் அளவை 1MB என்பதில் இருந்து 4MB என உயர்த்துவது.
நலன்: பரிவர்த்தனைகள் வேகமாக நடக்கும்
பாதிப்பு: பரிவர்த்தனையை சரிபார்க்கும் நிரலை (mining) எவரும் அவரவர் கணினியில் நிறுவி சரிபார்க்கலாம். ஆனால் 4MB என உயர்த்தினால் 100 கணினிகள், 1000 கணினிகள் என ஒரே இடத்தில வைத்து mining செய்வோர் மட்டுமே சரிபார்க்க முடியும். இது காலப்போக்கில் 1000 கணினி வைத்துள்ள ஒரு 200 பேர் சேர்ந்து அவர்களின் விருப்பப்படி அதிக கட்டணம் தருவோரின் பரிவர்த்தனையை மட்டுமே நாங்கள் சரிபார்ப்போம் என மாற்றினால் இது பணத்திற்கு நல்லதல்ல.
2 & 3 இதை ஆர்வம் உள்ள டெக்தமிழ் வாசகர்கள் விடாலிக்கின் இந்த கட்டுரையில் படித்துதெரிந்துகொள்ளவும்.
அவர் மேலும் எதிரியம் பவுண்டேசன் எனும் தனது அமைப்பில் $50000, $1,000,000 வரையிலான பணத்தை நெட்ஒர்க்கை விரிவாக்கும் ஆலோசனை சொல்லும் தனி நபர்கள், கல்லூரிகள், நிறுவனங்கள் ஆகியவற்றின் ஆராய்ச்சி பணமுடிப்பாக தர உள்ளதாக அறிவித்துள்ளார்.
கணினி நெட்வொர்க்கிங், கணிதம் சிறப்பாக தெரிந்த வல்லுநர்கள் எதிரியம் பிளாக் செயின் வேகத்தை அதிகரிப்பது பற்றி ஆலோசனை இருந்தால் தெரிவிக்குமாறு தெக்தமிழ் இணையதளம் அழைக்கிறது. பிட்காயின் வணிகம் செய்யும் ஆர்வம் உள்ள தமிழர்களை போல பிளாக் செயின் தொழில்நுட்பத்தில் ஆர்வம் உள்ள தமிழர்கள் ஒரு குழுவாக திறந்த நிலை மென்பொருள் வடிவமைப்பு போன்றவற்றில் ஈடுபடவும் திட்டம் உள்ளது. எனது ட்விட்டர் பக்கத்தில் தொடர்புகொள்ளவும்.

You might also like

Comments are closed.