சந்திரனைச் சுற்றி இரு செய்மதிகள் ஆராய்ச்சியில்

569

 1,094 total views

சந்திரனை சுற்றி வரக் கூடிய சுற்றுவட்டப் பாதையில் அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா செய்மதி ஒன்றைச் செலுத்தியுள்ளது.

அது சந்திரனின் ஈர்ப்பு சக்தி குறித்து ஆராயும். இது குறித்த இரண்டாவது செய்மதியை செலுத்தும் முயற்சி ஒன்று ஞாயிறன்று மேற்கொள்ளப்பட்டது.

இவற்றில் இருந்து வரும் தரவுகளைக் கொண்டு சந்திரனின் மேற்பரப்பில் உண்மையாக என்ன இருக்கிறது என்பது குறித்து அறிய முடியும் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.

அதன் மூலம் சந்திரன் எப்படி உருவானது என்பது குறித்து அறிய முடியும் என்பது அவர்களது எதிர்ப்பார்ப்பு.

சந்திரனில் உள்ள குன்றுகள் ஒரு ஒழுங்கில்லாது அதன் ஈர்ப்பு சக்தியில் ஏற்படுத்தக் கூடிய மிகச் சிறிய மாற்றங்களை இந்த செய்மதிகள் ஆராயும்.

இந்த ஆய்வுகளை மேற்கொள்வதற்கு ஒரே மாதிரியான இரு செய்மதிகள் ஏன் அவசியம் என்பதை நாசாவின் இந்த ஆய்வுத் திட்டத்தின் தலைமை விஞ்ஞானியான டாக்டர் மரியா ஷூப்பார் விளக்கினார்.

இந்த ஆய்வுத்திட்டத்தின் நோக்கம் சந்திரனின் ஈர்ப்புப் புலத்தை வரைவுபடுத்துவது என்பதால் அந்த ஈர்ப்புப் புலம் ஒரு செய்மதியில் என்ன தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதைக் கொண்டுதான் அதனை நாங்கள் கணிக்கப்போகிறோம் என்றார் அவர்.

அத்துடன் அந்த செய்மதியுடன் நாம் நேரடி தொடர்பில் இல்லாவிட்டால் அதன் மீது சந்திர ஈர்ப்பு விசை ஏற்படுத்தக் கூடிய தாக்கத்தை நம்மால் கணிக்க முடியாது. அதேவேளை சந்திரனின் ஒரு புறம் தான் பூமிக்கு தெரியும் அடுத்த பக்கம் தெரியாது.

ஆகவே இரு பக்கங்களிலும் நாம் செய்மதிகளை வைத்திருந்தால் தான் அவை ஒன்றில் இருந்து ஒன்று தகவலைப் பெற்றுத் தரும். அதன் மூலம் அனைத்து வேளைகளிலும் அவற்றின் மீது ஏற்படும் தாக்கங்களை நாம் கண்டறியலாம் என்றும் டாக்டர் மரியா ஷூப்பர் கூறினார்.

சந்திரனின் ஒரு பக்க அடுத்த பக்கத்தில் இருந்து வேறு படுகின்றது என்ற அடிப்படைக் கேள்விக்கு நாம் இன்னமும் பதில் காணவில்லை. இதற்கு முந்தைய முயற்சிகளில் நாம் சந்திரனின் மேற்பரப்பில்தான் அதிக கவனம் செலுத்தியுள்ளோம். ஆனால் இந்தக் கேள்விக்கான பதில் என்பது சந்திரனுன் உள்ளே தான் உள்ளது. அதனால்தான் அதனை ஆய்வு செய்வதற்கு இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இங்கு இருக்கின்ற ஒரு கோட்பாடு என்னவென்றால் எமது இந்தச் சந்திரன் தோன்றிய போது பூமிக்கு இரு சந்திரன்கள் இருந்தன என்றும் அவை ஒன்றோடு ஒன்று மோதியதால்தான் இந்த சந்திரனின் ஒரு புறத்தில் சீரற்ற மலைக் குன்றுகள் தோன்றின என்றும் கருதப்படுகிறது.

அந்த மலைகள் உள்ள பகுதி சந்திரனின் பூமியை நோக்கிய பக்கமாக இல்லாமல் அடுத்த பக்கமாக இருப்பதாக கருதப்படுகிறது. அதனை ஆய்வு செய்து கண்டறிவதுதான் இந்த முயற்சியின் நோக்கமாகும்.

You might also like

Comments are closed.