என்னதான் பிரச்சனை இந்த Free Basics இன்டர்நெட் சேவைக்கு!

519

 1,760 total views

முகநூல் தலைமை செயல்  அதிகாரியான மார்க் ஜூக்கர் பெர்கின் “free basics internet ” என்று அழைக்கபடுகின்ற இலவச இணைய சேவையை பல முன்னணி மொபைல் நிறுவனங்களுடன்  சேர்ந்து அறிமுகபடுத்த உள்ளார்.
Free Basics இன்டர்நெட் சேவை என்றால் என்ன ?     
          Free basics internet- என்ற செயலியை (Mobile App) நமது மொபைலில் பதிவிறக்கம் செய்த பின் குறிப்பிட்ட சில வலைத்தளங்களை மட்டும் இலவசமாக அணுகிக் கொள்ளலாம்.இதன் மூலம் இந்தியா முழுவதும் சில முக்கிய தளங்களை இலவசமாக  அணுகும் முறையை கொண்டு  வரும் முயற்சியில் உள்ளனர். ஆகையால் இதுவரை இணையத்தை உபயோகிக்காத  பல மில்லியன் பயனர்களை   இணையத்திற்கு கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக  ரிலையன்ஸ்  கம்யூனிகேசனுடன்  கூட்டு சேர்ந்துள்ளனர்.  ஆனால் இந்த திட்டத்திற்கு   இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தற்காலிகமாக  சிவப்பு  கொடி காட்டி நிறுத்தி வைத்துள்ளது. இலவசமாக  கிடைக்கும்  இணையத்தை ஏன் அணுகவிடாமால் செய்கிறார்கள்?என மனதில் எழும் கேள்விகளுக்கு பதிலாக இந்த free basics திட்டத்தில் பல குறைபாடுகளை   கொண்டுள்ளது.
                 இந்த ஃப்ரீ  பேசிக்ஸ் இன்டர்நெட்டால்  நெட்வொர்க் நீயூட்ராலிட்டிக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் இலவசம் என்ற பெயரில் குறிப்பிட்ட சில வலைதளங்களை  மட்டும் இலவசமாக  அணுகிக் கொள்ளவும் மற்ற தளங்களுக்குச் சென்று பார்ப்பதற்கும்  மற்றும் பதிவிறக்கம், பதிவேற்றம்  செய்வதற்கும் கட்டணங்கள்  வசூலிக்கப்படுகின்றன. இதனால் இலவசம் என்ற பெயரில் மக்களை கவர்ந்து அதன் மூலம் இலாபம்  ஈட்டுவதற்கு பல வாய்ப்புகள் உள்ளன.கூடவே மொபைல் நெட்வொர்க் நிறுவனங்களுக்கு  இடையிலான  ஒப்பந்தங்களைப் பற்றியும் தெளிவான தகவல் ஏதும் இல்லாததால்   இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் இந்த சேவையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
                    மேலும்  இதுபோன்ற  சேவை அமலுக்கு வந்தால்  சாதரணமாக நாம் தற்போது  இலவசமாக உபயோகித்துக் கொண்டிருக்கும் பல வலைதளங்களுக்கு  கூட   கட்டணத்தோடு  பார்க்கும் சூழ்நிலை உருவாகலாம்.அதாவது உதாரணமாக குறிப்பிட்ட சில வலைதளங்களுக்கு   இலவசமாக அணுகிக் கொள்ள வாய்ப்புகள் அளிக்கப்படும்போது  கண்டிப்பாக  அனைத்து மக்களும் ஒரு வலைதளத்திலேயே அதிக நேரம் செலவிடுவதால்  தானாகவே   அதிகளவு பயனர்களின் காரணமாக  அந்த  குறிப்பிட்ட வலைதளம்  மட்டும்  அதிக பணத்தை ஈட்டி இலாபத்தின் உச்சிக்கு சென்று விடும். அதே  நேரம் மற்றொரு சமூக வலைத்தளத்தை  கட்டண சேவையோடு வழங்கினால்  சாமானிய  மக்களால் அணுக முடியாமல்  அதனை பணமுள்ளவர்கள் மட்டுமே அணுகும்  நிலை ஏற்படும். இந்த நிலை தொடர்ந்தால்  சாதரணமாக  இலவசமாக தற்போது நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் வளைதளங்களைக்  கூட  கட்டணம்  செலுத்தியே  பெறும்  நிலை உண்டாகும்.
இணைய சுதந்திரம் பாதிக்கப்படுமா?

  ஆம் , கண்டிப்பாக  இணையத்தை பொருத்தவரையிலான தனி மனிதரின்  சுதந்திரம் பாதிக்கப்படலாம். ஆம்,  அதாவது இன்றைய நிலையில்  தற்போது விருப்பட்ட வலைதளங்களுக்குச்  சென்று  பிடித்த செய்திகளை பார்த்து ரசித்துக் கொண்டிருக்கும் நம்மை,  எதிர்காலத்தில் குறிப்பிட்ட  சில வலைத்தளங்களைத்  தவிர மற்ற தளங்களுக்கு  செல்ல கண்டிப்பாக கட்டணம் வசூலிக்கப்படும். ஆகையால் நினைத்த நேரத்தில் விரும்பிய தளங்களை அனைவராலும் காண முடியாது. ஒருசில பணமுள்ள மக்கள் மட்டுமே அணுகிக்கொள்ள வாய்ப்புகள் உள்ளது. அதாவது  இதன் மூலம் இலவசம் என்று கூறிவிட்டு மக்களை பரவசபடுத்திவிட்டு  அதன் மூலம் பல கோடிக்கணக்கான  ரூபாய்களை கொள்ளையடிக்க வாய்ப்புகள் உள்ளது. இது போன்ற பல கேள்விகளுக்கு பதிலளித்து விட்டு  முகநூல்  அதன் free basic internet சேவையை நடைமுறைக்கு கொண்டு வருவது  சாத்தியமில்லாத ஒன்றே !

கூகள் மற்றும் முகநூலின் சந்தை கைப்பற்றும் போட்டியின் ஆரம்பமா இது?

இன்று ரிலையன்ஸ்  நிறுவனத்துடன் சேர்ந்து முகநூல்  தன் வசதிக்கு உட்பட்ட தளங்களை இலவசமாக தருவது , இதுவரை இணைய வசதியை அனுபவித்திராத மக்களை முதன் முதலில்  பார்க்கும் இணையதளங்கள் அனைத்தும் முகநூல் கூட்டணிக்கு உட்பட்டவையாக இருக்கும்.  இந்த கூட்டணியில் இடம்பெற பெரிய நிறுவனங்களுடன் முகநூல் பல விதங்களில் பேரம் பேசும்.

இணைய சேவைகளை பல விதங்களில் கட்டுபடுத்தும் கூகள் நிறுவனத்திற்கு எதிர் கூட்டணி தான் முகநூல் தளத்தின் Free Basics. கூகள் நிறுவனமும் சாதாரணது அல்ல. இன்னமும் விண்டோஸ் கைபேசிகளில் கூகள் நிறுவன செயலிகள் (applications) எதுவும் வெளியிடாமல் உள்ளது கூகள். தனது போட்டி நிறுவனங்களாக ஆரம்பிக்கப்படும் சிறு நிறுவனங்களை பெரிய தொகைக்கு வாங்கி அந்த மென்பொருட்களுக்கு மூடுவிழா நடத்தி வருகிறது.

இந்தியா போன்ற நாடுகளில் மக்கள் தொகை அதிகம், அந்த மக்களின் மூலம் விளம்பரங்களை காட்ட என்னிடம் இவ்வளவு பெரிய சந்தை உள்ளது எனக் காட்டும் ஆட்டுமந்தைகளை அணி சேர்க்கும் திட்டங்களின் முதல் கட்டம் தான் இன்றைய Free Basics.

இணைய சேவையை சிதைக்கும் வழிகள்.

இன்று நாம் மாசம் இவ்வளவு என இணைய கட்டணம் கட்டுகிறோம், நம்மால் எந்த ஒரு இணையதள சேவையையும் இந்த ஒரு மாத காலத்திற்குள் , நம் 80 GB  பயன்பாட்டு வரம்புக்குள் பயன்படுத்த முடியும். ஆனால்  இணைய சேவை நிறுவனங்கள்  இந்த பட்டியலில் உள்ள 50 தளங்களை பார்க்க இலவசம். அல்லது இந்த சேவையை பார்த்தல் இவ்வளவு அதிக கூடுதல் கட்டணம் வசூலிக்க திட்டம் தீட்டின.  இது இணையத்தில் உள்ள புதிய / சிறிய இணைய தளங்களை பெரு நிறுவனங்களின் தளங்களுடன் போட்டியிட முடியாமல் வெளியேற்றும் உக்தியாகும்.

உதாரணதிற்கு., பிளிப் கார்ட் இணைய தளம் பிரீ பேசிக் முறையில் வருகிறது எனக் கொள்வோம், இதற்கு பணம் அல்லது தகவல் பகிர்வு என உடன்படிக்கையை முகநூல் / ரிலையன்ஸ் நிறுவனத்துடன் பிளிப்கார்ட் ஏற்படுத்தி இருக்கும்.  இவர்கள் உருவாக்கியிருக்கும் வேலியில் இணைய வாணிபம் என்றாலே பிளிப்கார்ட் தளம் தான் என ஒரு பயனர் புரிந்துகொள்வார். வேறு நிறுவனங்கள் தளத்தை திறந்தால்  ஒவ்வொருமுறையும் பணம் போகும் , இதனால் மற்ற சிறு நிறுவனங்களின் இணைய வழி வருமானமே கேள்விக்குள்ளாகும்.  அவர்கள் அனைவரும் பிளிப் கார்ட் தளத்தின்  வழியாக மட்டுமே வாணிபம் செய்யும் நிலைக்கு இணையத்தில் தள்ளபடுவார்கள்.

இது கண்களை கைப்பற்றும் ஆரம்ப நிலை

இணையத்தில் “Reaching eye balls” எனும் சொலவடை உண்டு. யாரிடம் அதிக பார்வையாளர்கள் இருக்கிறார்களோ அவர்களே அதிக வருமானம் ஈட்ட முடியும்.  தான் வழங்கும் இந்த இலவச சேவையை இவ்வளவு கோடி பேர் இந்தியாவில் பயன்படுத்துகிறார்கள், அவர்கள் உன் தொழில் இணைய தளத்தை பார்க்க என்னுடன் நீ கூட்டணி சேரவேண்டும் என மற்ற நிறுவனங்கள் வலியுறுத்தும் போட்டியே ஆகும்.

கூகள் நிறுவனம் பிற செல்பேசி சேவை நிறுவனங்களுடன் இப்படி பேசி ஒப்பந்தம் போடுவதை விட தானே ஒரு செல்பேசி சேவை நிறுவனமாக அமெரிக்காவில் மாறியுள்ளது. அதன் பெயர் Project Fi

போட்டி நிறுவங்களின் சேவையை தடுத்தல் அல்லது மெதுவாக்குதல்:

நீங்கள் எந்த கூட்டணியின் சேவையை பயன்படுத்துகிறீர்களோ அதன் போட்டி நிறுவன தளங்கள் உங்களுக்கு மிக மெதுவாக லோட் ஆகும்.

நீங்கள் பேஸ்புக் கூட்டணியின் Free basics இல் இருந்தால் கூகள் கூட்டணி நிறுவன தளங்கள் மெதுவாகவே உங்களுக்கு லோட் ஆகும். இதே தான் மற்ற கூட்டணிக்கும். ஆகவே இந்த மாதிரி இணைய சேவை நிறுவனங்கள், பெரிய நிறுவனங்களின் சந்தை கைப்பற்றும் போட்டிக்குள்  நாம் எந்த தளத்தை வேகமாக பார்க்கலாம், பார்க்க கூடாது , ஒவ்வொரு நிமிடமும் நாம் எந்த தளத்தை பார்க்கிறோம் என இவர்கள் மறைமுகமாக கண்காணிப்பதும் மிகவும் மோசமான சூழலையே மக்களுக்கு எதிர்காலத்தில் வழங்கும்.

வாட்ஸ் அப் செயலியை முடக்க நினைக்கும் ஏர்டல் மற்றும் பிற நிறுவனங்கள்.

நீங்கள் ஒரு 100 ரூபாய்க்கு இணைய டாப் அப் செய்கிறீர்கள், அதை வைத்து 500 ரூபாய் மதிப்புள்ள பல வாட்ச் அப் வாய்ஸ் கால் செய்து உங்கள் நண்பர்களிடம் STD, ISD கால் செய்து பேசுகிறீர்கள். இது செல்போன் நிறுவனத்திற்கு நட்டமாக அவர்கள் பார்கிறார்கள். ஆனால் அது தான் இணையத்தின் சிறப்பு. நீங்கள் இதே போல் Skype வழியாகவும் குறைந்த கட்டணத்தில் பேச முடியும். இவற்றின் அடிப்படை பயன்பாடு இணைய சேவை தான். ஆக இது போன்ற மென்பொருள்கள் இணைய சேவையை பயன்படுத்தி தங்களின் சராசரி செல்போன் கட்டணங்களை கிடைக்கவிடாமல் செய்கின்றன என ஒவ்வொரு அப் (செயலி ) பயன்படுத்தவும் இந்த கட்டணம் என மாற்ற ஏர்டெல் போன்றவை திட்டம் தீட்டி வருகின்றன.

இலவச சேவை, இவற்றிற்கு மட்டும் கட்டணம் எனும் அடிப்படையில் கூகள், முகநூல், ரிலையன்ஸ், ஏர்டெல் என எவர் வந்தாலும் நாம் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். நாம் எந்த தளத்தை பார்க்கவேண்டும் எனும் வேலியை இட அனுமதிக்கக் கூடாது.

You might also like

Comments are closed.